மோனலிசா
குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் 'சைல்ட்எய்ட்' அறப்பணி அமைப்பின் விருந்து நிகழ்ச்சியில் நேற்று $2.16 மில்லியன் திரண்டது.
தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தி பிசினஸ் டைம்ஸ் நாளிதழ்கள் இணைந்து ஆண்டுதோறும் நடத்திவரும் இந்த நிதி திரட்டு நிகழ்ச்சி, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக கலாசார நிலையத்தின் உள்ளரங்கில் நடந்தது.
இந்த ஆண்டையும் சேர்த்து 18 ஆண்டுகளில் மொத்தம் $26.46 மில்லியன் நிதி நன்கொடையாகத் திரட்டப்பட்டுள்ளது.
இந்த நிதி, எஸ்டி பள்ளி கைச்செலவு நிதிக்கும் பிசினஸ் டைம்ஸ் 'இளம் கலைஞர்கள் (படிங் ஆர்ட்டிஸ்ட்)' நிதிக்கும் பயன்படுத்தப்படும்.
எஸ்டி பள்ளி கைச்செலவு நிதி வசதி குறைந்த சிறார்களுக்குக் கைக்காசு வழங்குகிறது.
இளம் கலைஞர்கள் நிதி மூலம் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறார்கள், இளையர்கள் கலைத்துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற உதவி பெறலாம்.
யுஓபி வங்கி $1 மில்லியன், சிட்டிபேங்க் $550,000, எம்இஎஸ் குழுமம் $500,000, கனேசகா சுஷி நிறுவனம் $110,276 நன்கொடையாக வழங்கின.
ஈராண்டுகளுக்குப் பின் நடந்த இந்நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.