ஓசிபிசி வங்கி மோசடியுடன் தொடர்புடைய ஆடவருக்கு மூன்று மாதங்கள், 22 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு $500 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் அனைத்து வகை வாகனங்களை ஓட்டவும் அவற்றுக்கான உரிமங்களைப் பெறவும் 32 வயது மார்க் டியோ சின் யானுக்கு ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டில் தமது நிறுவனத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்கை இன்னொருவர் பயன்படுத்த டியோ ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி இணைய மோசடி மூலம் பறிக்கப்பட்ட பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு மொத்தம் $53,801 பெறப்பட்டது.
இதில் ஓசிபிசி வங்கி
மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து ஏமாற்றிப் பறிக்கப்பட்ட $18,801 தொகையும் அடங்கும்.
எஞ்சிய தொகைக்கும் ஓசிபிசி வங்கி மோசடியுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.
தம்மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளை டியோ ஒப்புக்கொண்டார்.
அவற்றில் மிரட்டல் விடுத்தல், போக்குவரத்துக் குற்றங்கள் போன்றவை அடங்கும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதிக்கும் கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஓசிபிசி வங்கிக் கணக்கு வைத்திருந்த சிலர் காவல்துறையிடம் புகார் செய்தனர்.
ஓசிபிசி மோசடி தொடர்பாக மொத்தம் 768 புகார்கள் பதிவாகின.
அடையாளம் தெரியாதவர்கள் விரித்த மோசடி வலையில் சிக்கியதாக ஓசிபிசி வங்கிக் கணக்கு வைத்திருந்த சிலர் புகார் செய்தனர்.
தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து தங்கள் அனுமதி இல்லாமல் பணம் எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டோருக்கு மொத்தம் $12.8 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.
தமது வாடிக்கையாளர்களின் நலன் கருதி பாதிக்கப்பட்டோருக்கு அவர்கள் இழந்த பணத்தைக் கொடுப்பதாக ஓசிபிசி கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தது.
இது ஒருபுறம் இருக்க, டாக்சி கட்டணம் செலுத்தாமல் கத்தியைக் காட்டி டாக்சி ஓட்டுநரை மிரட்டியதாகவும் டியோ மீது குற்றம் சுமத்தப்பட்டது.
டியோவிடமிருந்து தப்ப முயன்றபோது அந்த டாக்சி ஓட்டுநரின் இடது தோள்பட்டையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, காவல்துறையிடம் டியோ சரணடைந்தார்.
பாதிக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர் மருந்தகத்தில் சிகிச்சை பெற்றுக்கொண்டார். அவருக்கு ஏற்பட்ட காயத்துக்குத் தையல் போடப்பட்டது. அவருக்கு நான்கு நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று 62 வயது ஆடவரை ஏமாற்றி அவரிடமிருந்து டியோ $500 பறித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உரிமம் இல்லாமல் இயோ சூ காங் சாலையில் டியோ கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது பிடிபட்டார்.

