ஏழாவது மாடி வீட்டிலிருந்து 13 பீர் போத்தல்களை வீசிய ஆடவருக்கு 15 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தமக்குக் கைகள் தொடர்பான மருத்துவப் பிரச்சினை இருப்பதால் வீடமைப்பு வளரச்சிக் கழகத்தின் இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தமது வீடு புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, வீட்டில் உள்ள குப்பைத் தொட்டிக்குள் போத்தல்களை வீசுவதில் தமக்குச் சிரமம் ஏற்பட்டதாக 58 வயது லிம் லாய் சூன் தெரிவித்தார்.
ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் உள்ள தமது ஏழாவது மாடி வீட்டிலிருந்து பீர் போத்தல்களை வீசி பிறருக்கு ஆபத்து விளைவித்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
துப்புரவுப் பணியாளரான லிம் கடந்த பிப்ரவரி மாதத்துக்கும் ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தனித்தனிச் சம்பவங்களாக மொத்தம் 13 முறை, தமது ஏழாவது மாடி வீட்டிலிருந்து பீர் போத்தல்களை வீசியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 17ஆம் தேதியன்று இதுகுறித்து காவல்துறையிடம் ஒருவர் புகார் செய்தார்.
அந்த நபர் வேலையிடத்துக்குச் செல்ல காலை நேரத்தில் கூரை உள்ள நடைபாதையில் போக்குவரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது மாடியி
லிருந்து வீசப்பட்ட பீர் போத்தல் தரையில் விழுந்து சிதறியது.
தனித்தனிச் சம்பவங்களாக ஏழு முறை, ஏழாவது மாடி வீட்டிலிருந்து பீர் போத்தல்கள் வீசப்பட்டதாக அதே கட்டடத்தின் ஆறாவது மாடியில் வசிக்கும் இன்னொருவரும் புகார் செய்திருந்தார்.
இதுதொடர்பாக காவல்துறை, தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவை விசாரணை நடத்தின. கண்காணிப்பு கேமராக்களின் உதவியோடு லிம் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்,
லிம்முக்கு நான்கு மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்திடம் அரசாங்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.