உணவு உற்பத்தித் துறை வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும் வேலை மறுவடிவமைப்பு
உணவு உற்பத்தித் துறையில் அடுத்த ஐந்தாண்டுகளில் புதிதாக ஏறக்குறைய 2,500 வேலைகள் உருவாகும். மறுவடிவமைக்கப்பட்ட வேலைகளும் இவற்றில் அடங்கும்.
உணவு உயிரியல்தொழில்நுட்பர், நீடித்த நிலைத்தன்மைப் பொறியாளர், தானியக்கப் பொறியாளர் உள்ளிட்ட புதிய எட்டுப் பிரிவுகளில் வேலைகள் உருவாக்கப்படவிருக்கின்றன.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தொழில்துறை உருமாற்றத் திட்டம் 2025ல் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பிடோக் ஃபுட் சிட்டியில் அமைந்துள்ள சின் முய் ஹெங் ஃபுட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையை நேற்றுத் திறந்துவைத்து அவர் உரையாற்றினார்.
உணவு உற்பத்தித் துறைக்கான வேலை உருமாற்றத் திட்டத்தின்கீழ் முதலாளிகள் ஊழியர்களுக்குத் தேவைப்படும் திறன்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளிப்பதும் உருமாற்ற முயற்சிகளுக்கு ஏற்ற புதிய வேலை வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதும் சாத்தியம் ஆகும்.
வேலை உருமாற்றத் திட்டத்தை எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் நிறுவனம், மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் ஊழியரணி ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான முக்கிய வேலைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப நிறுவனங்கள் அவற்றின் திறனாளர் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்குக் கடைப்பிடிக்கவேண்டிய உத்திகளை அத்திட்டம் பரிந்துரைக்கிறது. வர்த்தக உருமாற்றத்தையும் அது ஆதரிக்கிறது.
புதிய வர்த்தக மாதிரி, வேலைகள் ஆகியவற்றுக்கு ஊழியர்களின் ஆதரவு கிட்டாவிட்டால் நிறுவனங்களை மறுசீரமைக்க இயலாது என்று டாக்டர் டான் தமது உரையில் குறிப்பிட்டார்.
"வர்த்தக உருமாற்றத்திற்குத் திறனுள்ள ஊழியர்கள் முக்கியம். அதேநேரத்தில் நிறுவனங்களின் உருமாற்றம், திறனை மேம்படுத்திக்கொண்டு புதிய வேலை வாய்ப்புகளைக் கைப்பற்றுவதில் ஊழியர்கள் கூடுதல் ஆர்வம்காட்டுவதற்கு ஊக்கமளிக்கிறது," என்றார் அவர்.
வேலை உருமாற்றத் திட்டம் மாற்றம் தேவைப்படும் 22 வேலைகளை ஆய்வுசெய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவற்றில் 25 விழுக்காட்டு வேலைகள் மறுவடிவமைக்கப்படும். அல்லது மேம்பட்ட பொறுப்புகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டது.
மற்ற வேலைகளில் அதிக மாற்றம் தேவைப்படாவிட்டாலும் மின்னிலக்கமயமாதல், தானியக்கமயமாதல் ஆகியவை தேவைப்படுகின்றன. கூடுதலான நிறுவனங்கள் வேலைகளை மறுவடிவமைத்து, அவற்றுக்கேற்ப ஊழியர்களுக்கு மறுபயிற்சி, திறன்மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை வழங்குவதற்கு அரசாங்க அமைப்புகளும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசும் தொடர்ந்து உதவும் எனக் கூறப்பட்டது.

