அடுத்த ஆண்டு உயர்நிலைப் பள்ளி முதல் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை முடிவுகள் இம்மாதம் 21ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு எழுதிய மாணவர்கள், உயர்நிலைப் பள்ளிச் சேர்க்கைக்கான விண்ணப்பத்துடன் சிங்கப்பூர் தொலைபேசி எண்ணை இணைத்திருந்தால், குறுஞ்செய்தி வாயிலாக அவர்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இணையத்தின் வாயிலாகவும் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் படித்த தொடக்கப்பள்ளிகளிலும் இந்த முடிவுகளைத் தெரிந்துகொள்ள இயலும்.
முடிவுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் புதிய பள்ளிக்கு நேரில் செல்லவேண்டிய அவசியமில்லை என்று அமைச்சு கூறியது. கூடுதல் விவரங்களுக்கு இம்மாதம் 21ஆம் தேதி பிற்பகலில் இருந்து, அவரவர் உயர்நிலைப் பள்ளியின் இணையத்தளங்களை நாடலாம்.
கல்வியாண்டின் முதல் நாளான அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி தகுந்த காரணங்களுக்காக உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல இயலாத மாணவர்கள், அதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்குத் தகவல் தெரிவிப்பதன் மூலம் தங்களது சேர்க்கையை உறுதி செய்துகொள்ளலாம்.

