செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
c8749147-aafd-407b-9f4f-aebe1076aa6e
-

'காமிர்நாட்டி' தடுப்பூசி: முதல் நாளில் 8,000 பேர் போட்டுக்கொண்டனர்

'ஃபைசர் பயோன்டெக்' நிறுவனம் தயாரித்துள்ள 'காமிர்நாட்டி' இருவகைத் திறன்கொண்ட கொவிட்-19 தடுப்பூசியை சிங்கப்பூரில் அறிமுகப்படுத்திய முதல் நாளான இம்மாதம் 12ஆம் தேதி, 8,000 பேர் அதைப் போட்டுக்கொண்டனர்.

சிங்கப்பூரில் இதுவரை போடப்பட்ட 13,400 இருவகைத் திறன்கொண்ட தடுப்பூசிகளில் இது ஏறக்குறைய 60 விழுக்காடு என்று சுகாதார அமைச்சு கூறியது.

மற்றவை 'மொடர்னா' நிறுவனத்தின் 'ஸ்பைக்வேக்ஸ்' தடுப்பூசிகள் என்று அமைச்சு சொன்னது.

புதிய இருவகைத் திறன்கொண்ட தடுப்பூசிகள் கொவிட்-19 நோய்க்கிருமியோடு அதன் ஓமிக்ரான் திரிபுகளுக்கும் எதிரான தடுப்பாற்றல் கொண்டவை.

'ஃபைசர் பயோன்டெக்' நிறுவனத்தின் இருவகைத் திறன்கொண்ட தடுப்பூசியை 12 வயதும் அதற்கு மேலும் நிரம்பியவர்களுக்குச் செலுத்தலாம்.

'மொடர்னா' நிறுவனத்தின் இத்தகைய தடுப்பூசியை 18 அல்லது அதற்குமேற்பட்ட வயதுடையோருக்கு மட்டுமே செலுத்தலாம். இதுவரை நாட்டில் 386,000 பேர் இருவகைத் திறன்கொண்ட தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

மழையால் சில பகுதிகளில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆனது

சிங்கப்பூரில் நேற்று பெய்த மழையால் சில இடங்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுக்குக் குறைந்தது.

பல பகுதிகளில் காலையிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. சாங்கி வட்டாரத்தில் நேற்று மாலை ஐந்து மணிக்கு 10.4 மில்லிமீட்டர் மழை பதிவானது.

இன்றும் காலை, பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது. முன்னதாக இம்மாத முற்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென முன்னுரைக்கப் பட்டிருந்தது. வடகிழக்குப் பருவமழைக் காலமாதலால் அடுத்த சில மாதங்களுக்கு இங்கு மழை தொடரக்கூடும்.