சிங்கப்பூரின் பெரிய பொது நிறுவனங்கள் பல, கொவிட்-19 கிருமிப் பரவல் தொடர்பான சவால்களுக்கு இடையிலும் நிர்வாகத் தரநிலை, செயல்முறைகள் தொடர்பில் 2019ஆம் ஆண்டைவிட சென்ற ஆண்டு சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக நிர்வாகப் பள்ளியின் நிர்வாகம், நீடித்த நிலைத்தன்மைக்கான நிலையமும் சிங்கப்பூர் இயக்குநர் கழகமும் இணைந்து நேற்று வெளியிட்ட 2021க்கான ஆசியான் நிறுவன நிர்வாக மதிப்பெண் பட்டியல் மூலம் இது தெரியவந்தது.
ஆசியான் வட்டாரப் பொது நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள சிங்கப்பூர் நிறுவனங்கள் பலவும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
சென்ற ஆண்டின் பட்டியலுக்கு சிங்கப்பூர், இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் மதிப்பிடப்பட்டன. இதில் 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் சென்ற ஆண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் சராசரிக்குமேல் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
ஈராண்டுக்கு ஒருமுறை சிறப்பாகச் செயல்படும் 100 பொது நிறுவனங்கள் இவ்வாறு தரவரிசைப்படுத்தப்படுகின்றன. பங்குதாரர்களின் உரிமைகள், வெளிப்படைத்தன்மை, இயக்குநர் வாரியத்தின் பொறுப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பில் இந்நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
நெட்லிங்க் என்பிஎன் டிரஸ்ட், யூஓபி வங்கி, கம்ஃபர்ட்டெல்குரோ ஆகியவை பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்கள்.