சிங்கப்பூரில் பெட்ரோல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று கால்டெக்ஸ் தவிர்த்து ஏனைய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஆறு காசு குறைத்தன. கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஆகக் குறைவான விலை இது.
டீசல் விலை லிட்டருக்கு எட்டுக் காசு குறைந்துள்ளது. நேற்றுப் பிற்பகல் நிலவரப்படி 'கால்டெக்ஸ்' நிறுவனம் மட்டுமே எரிபொருள் விலையில் மாற்றம் செய்யவில்லை.
சென்ற வாரம் ஒரு பீப்பாய் 'பிரெண்ட்' கச்சா எண்ணெய்விலை 76.10 டாலராக இருந்தது. கடந்த மார்ச் மாதம் அது 120 டாலராக இருந்தது.
உலகெங்கும் மோசமான பொருளியல் மந்தநிலை ஏற்படும் என முன்னுரைக்கப்பட்டிருக்கும் வேளையில், எண்ணெய்க்கான தேவை கணிசமான அளவு குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் தற்போது 'சைனோபெக்' டீசல் லிட்டருக்கு $2.61; 'எஸ்ஸோ' நிறுவனத்தின் 92-ஆக்டேன் ரகப் பெட்ரோல் விலை $2.63.
'எஸ்பிசி'யில் ஒரு லிட்டர் 95-ஆக்டேன் ரகப் பெட்ரோலின் விலை $2.67ஆக உள்ள வேளையில் 'ஷெல்' நிறுவனம் $3.17க்கு விற்பனை செய்கிறது.

