தொடர்ச்சியாக ஏற்றம் கண்டுவரும்
தனியார் அடுக்குமாடி, வீவக வீடுகளின் வாடகை கடந்த நவம்பர் மாதத்தில் கணிசமான ஏற்றத்தைக் கண்டு வந்துள்ளது. சொத்துச்சந்தை நிறுவனங்களான எஸ்ஆர்எக்ஸ், 99.co ஆகியவை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 1.8 விழுக்காடு ஏற்றம் கண்ட வாடகை, நவம்பர் மாதத்தில் 1.6 விழுக்காடாக தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது.
இது முதிர்ச்சியடைந்த மற்றும் முதிர்ச்சியடையா குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள அனைத்து வகையான வீடுகளுக்கும் பொருந்தும் என்று அந்த சொத்து நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை நவம்பர் மாதம் இரண்டு விழுக்காடு அதிகரித்தது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 2.7 விழுக்காடாக இருந்தது. புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளின் விலை 3.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. கொண்டோமினிய வீடுகளின் வாடகை தொடர்ந்து கடந்த 23 மாதங்களாகவும் வீவக வீடுகளின் வாடகை தொடர்ந்து 29 மாதங்களாகவும் ஏற்றம் கண்டு வருகின்றன.
"வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர்க் குடியிருப்பாளர்களுக்கான வீட்டுத் தேவையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில் வீவக மற்றும் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் சுணக்கமும் இந்த தொடர்ச்சியான வாடகை அதிகரிப்புக்குக் காரணம் என்று இஆர்ஏ ரியல்ட்டி சொத்து நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் தலைவர் நிக்கோலஸ் கூறியுள்ளார். தனியார் அடுக்குமாடி வீடுகளின் வாடகை 2021ஆம் ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் 34 விழுக்காடு அதிகரிப்பாகும். புறநகர்ப்பகுதியில் 36.5 விழுக்காடு வாடகை அதிகரித்துள்ளது.
2021 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் வீவக வீடுகளின் வாடகை 27.8 விழுக்காடும் எக்சிகியூட்டிவ் வீடுகளின் வாடகை 31.4 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப் கூறினார்.

