மகளைக் காயப்படுத்திய குற்றத்திற்காக 41 வயது சாஹாடியா ஜமாரிக்கு நேற்று 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2016ல் தமது பராமரிப்பில் இருந்த இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த குற்றத்திற்காக ஏற்கெனவே ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை இவர் அனுபவித்து வருகிறார். முன்னர் அவர் குழந்தைப் பராமரிப்பாளராகவும் தாதியாகவும் இருந்தபோது தமது பராமரிப்பில் இருந்த குழந்தைகளுக்கு தூக்க மருந்து உள்பட பல மருந்துகளை அவர் கொடுத்துள்ளார்.
கடந்த 2021 ஜூன் மாதம், தமது ஆண் நண்பருடன் சண்டை பிடித்தார் சாஹாடியா. நண்பரைத் திட்டிய பின்னர் 19, 20 வயதுகளில் இருந்த மகள்களையும் திட்டினார்.பொருள்களை எடுத்து வீசினார். இரு மகள்களும் சுத்தம் செய்ய உதவினர். பின்னர் 20 வயது மகளை அறையைச் சுத்தம் செய்யச் சொன்னார்.
அவர் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததால் கோபமடைந்த சாஹடியா, அவரைத் திட்டியதுடன், துணி தொங்கவிடும் ஹாங்கரால் முதுகிலும் இடது தோளிலும் பலமுறை காயம் ஏற்படுமளவுக்கு அவரை அடித்தார். பிறகு ரேசர் பிளேடால் மகளின் இடது தொடையில் வெட்டுக்காயம் ஏற்படுத்தினார். வெளியே ஓடிய இரண்டாவது மகள் காவல் துறையை அழைத்தார்.
வேண்டுமென்றே காயமேற்படுத்திய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார் சாஹாடியா.
சாஹாடியா தனது சொந்த மகள்களை ஆறு வயதிலிருந்தே உடல் ரீதியாகவும், வாய்மொழியாகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் என்று துணை அரசு வழக்கறிஞர் ஹீர்ஷன் கோர் கூறினார்.
அவர்களை அடித்ததோடு மட்டுமல்லாமல் சம்பவம் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்தால் அவர்களைப் பெண்கள் சீர்திருத்த நிலையத்துக்கு அனுப்பப்போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.
"இரண்டு மகள்களும் தங்கள் தாயை முழுமையாக நம்பியிருந்தனர், எந்த வகையான துன்புறுத்தலிருந்தும் அவர்களை அவர் பாதுகாத்திருக்க வேண்டும்," என்றார் அவர்.
வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய குற்றத்திற்கு, மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

