நான்கு ஆண்டுகளாக தேசிய சேவையைச் செய்யத் தவறிய ஆடவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் நேற்று நடந்த நீதிமன்ற விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டார்.
நொவ்ரியாண்டி ரிஸால்டி என்ற அந்த ஆடவர், வெளிநாடு செல்லும்போது பெறவேண்டிய அனுமதியைப் பெறாமல், வெளிநாட்டில் தங்கியிருந்துள்ளார். பின்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி தனது கடப்பிதழைப் புதுப்பிப்பதற்காக சிங்கப்பூர் திரும்பியபோது கைதுசெய்யப்பட்டார்.
ரிஸால்டி 2007 ஜனவரி 26ஆம் தேதியன்று தேசிய சேவைக்கு பதிவுசெய்திருந்தார். பின்னர், தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தான் படிக்கவிருக்கும் படிப்பு முடியும்வரை தேசிய சேவையை ஒத்திவைக்கவேண்டும் என்று அவர் விண்ணப்பித்தார்.
2008 ஜனவரி 5ஆம் தேதி தேசிய சேவை செய்வதற்கு மத்திய ஆள்பலத் தளம் அனுமதி அளித்தது. ஆனால், ஒத்திவைக்கப்பட்ட தேதியில் அவர் தேசிய சேவையில் சேரவில்லை. மாறாக, மீண்டும் தனது தேசிய சேவையை ஒத்திவைக்கக் கோரி 2008 மார்ச் 7ஆம் தேதி விண்ணப்பித்திருந்தார். அப்போது அவர், தனது தொழில் கல்விக் கழக வகுப்பு 2008 ஏப்ரல் மாதம் தொடங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதற்கான சான்றுகளை அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக லசால் கலைக் கல்லூரியில் 2008 முதல் 2011ஆம் ஆண்டு வரை பட்டயக் கல்வியில் சேரவிருப்பதற்கான சான்று ஒன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
அதன்பின் 2010ஆம் ஆண்டு இந்தோனீசியாவுக்குச் சென்றுவிட்டார். அப்போது அவர், வெளிநாடு சென்று வருவதற்கான அனுமதியைப் பெறவில்லை.
2015ஆம் ஆண்டில் தனது கடப்பிதழைப் புதுப்பிப்பதற்காக சிங்கப்பூர் வந்திருந்தார். 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று தேசிய சேவையில் சேருமாறு பலமுறை அவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டும் அவர், தேசிய சேவையில் சேராமல், புதுப்பிக்கப்பட்ட கடப்பிதழைப் பெற்றுக்கொண்டு இந்தோனீசியாவுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
நீதிமன்ற விசாரணையில் தனது தவறுகளை ஒப்புக்கொண்ட ரிஸால்டி, நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரினார். அத்துடன் அவர், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையில் இரண்டு ஆண்டுகள் தேசிய சேவை செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

