ஆசியான் - ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மேலும் அணுக்கமாக செயல்பட அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
பிரசல்சில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒருநாள் ஆசியான் - ஐரோப்பிய ஒன்றிய நினைவு உச்சநிலைக் கூட்டத்தின் முடிவின் இரு வட்டாரக் குழுக்களும் மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் உள்ளிட்டவற்றில் அணுக்கமாகச் செயல்பட உறுதிபூண்டன.
ஐரோப்பிய பயணத்தின் முடிவில் சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசிய திரு லீ, ஆசியான்- ஐரோப்பிய ஒன்றிய உறவு இந்த ஆண்டு முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறினார்.
அக்டோபரில் பாலித் தீவில் கையெழுத்தான ஆசியான் - ஐரோப்பிய ஒன்றிய விரிவான விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டிய அவர், வட்டாரங்களுக்கிடையிலான உலகின் இந்த முதல் விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றார்.
"இதனால் அதிக வான்வெளி உரிமைகள், அதிக இணைப்பு, வணிகர்களுக்கு அதிக வாய்ப்புகள், சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ய அதிக வாய்ப்புகள் ஏற்படும். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே அணுக்கமான இணைப்பு உருவாகும்," என்றார் பிரதமர் லீ.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஆசியான் - ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள 37 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் இரு வட்டார நாடுகளுக்கிடையே எவ்வளவு சேவைகளையும் வழங்க முடியும்.
அதிகபட்சமாக 14 வாராந்திர பயணிகள் சேவைகளையும், இந்த வட்டாரங்கள் வழியாகவும் அல்லது அதைத்தாண்டும் வேறு மூன்றாம் நாட்டிற்கு எவ்வளவு சரக்கு சேவைகளையும் வழங்க முடியும்.
பத்து ஆண்டுகளாக நடைபெற்ற இது குறித்த பேச்சுவார்த்தையில் ஆசியான் தரப்பின் பேச்சாளராக சிங்கப்பூர் செயல்பட்டதாக திரு லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையேயான பங்காளித்துவ முன்னேற்றம், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய- சிங்கப்பூர் மின்னிலக்கப் பங்காளித்துவத்தை பிரதமர் லீ சுட்டினார்.
ஐரோப்பிய ஆணையத்தின் அதிபர் உர்சுலா வான் டெர் லேயன்- திரு லீக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் முறையாக கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னிலக்க வர்த்தகமும் பசுமைப் பொருளியலும் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களின் அடுத்த அலையை உருவாக்கும் என்றார் திரு லீ.
பாரம்பரிய வர்த்தகத் துறைகளில் பல நாடுகளுடன் சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாடுகளை கொண்டுள்ளது. தற்போது இந்த இரு புதிய துறைகளில் பங்காளித்துவத்தில் ஈடுபட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஆசியான் - ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலைக் கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட தலைவர்களின் கூட்டு அறிக்கையில் மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் துறைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பு முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்தது.
பருவநிலை மாற்றம், நீர் பாதுகாப்பு, கடல் குப்பை, பசுமைப் பொருளியல், மறுபயனீட்டு எரிசக்தி, மின்னிலக்கத்துக்கு மாறுதல் போன்ற முக்கியமான துறைகள் உட்பட, இரு வட்டாரங்களும் நீடித்த நிலைத்தன்மையான, அனைவரையும் உள்ளடக்கிய வணிகத்தையும் முதலீட்டையும் ஊக்குவிக்கும் என்று அறிக்கை கூறியது.
ஆசியான் பொருளியலின் முதுகெலும்பாக இருக்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களை வளர்த்தல், மேம்படுத்துதல், ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பை ஆசியான் ஊக்குவிக்கிறது என்றும் அது கூறியது.

