தென்மேற்கு மாவட்டத்தில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய நீரிழிவு நோயாளிகள் 800 பேருக்கு நீரிழிவு பாரமரிப்புத் தொகுப்பு வழங்கப்படும்.
அதைப் பயன்படுத்தி ஆறு மாதங்களுக்கு ரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிக்கலாம்.
இதில் ரத்த சர்க்கரை கண்காணிப்புக் கருவி, 'டெஸ்ட் ஸ்ட்ரிப்', 'லான்செட்' ஊசிகள் தொகுப்பு, எச்பிஏ1சி பரிசோதனைக் கருவி ஆகியவை இருக்கும்.
அறக்கொடை அமைப்பான சிங்கப்பூர் நீரிழிவுச் சங்கம், மருந்துத் தயாரிப்பு நிறுவனம் 'ரோஷே டயபிட்டிஸ் கேர்' நேற்று தொடங்கிய சமூகத் திட்டத்தின்கீழ் இந்த விநியோகம் இடம்பெறுகிறது.
சமூகத்தில் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடியோர், உகந்த ரத்த சர்க்கரை அளவைக் கட்டிக்காக்க இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
அத்தியாவசிய அன்றாடப் பொருள்களுக்கு அப்பாற்பட்டு சுகாதாரப் பொருள்களையும் மருந்துகளையும் வாங்குவது பற்றி குறைந்த வருமானம் உடையோர் கவலைப்பட வேண்டாம் என்பதற்காகவே அவர்களை இலக்காகக் கருதி பரிசோதனைக் கருவிகள் வழங்கப்படுவதாக சிங்கப்பூர் நீரிழிவுச் சங்க நிர்வாக இயக்குநர் சத்யபிரகாஷ் திவாரி குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் மூலம் பலனடையக்கூடியவர்களை அடையாளம் காண, சமூக ஆதரவுக் குழுக்கள், சமூக அமைப்புகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து சிங்கப்பூர் நீரிழிவுச் சங்கம் பணியாற்றும்.
சங்கத்தின் தாதிமைக் கல்வியாளர்கள், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பயனாளர்களுக்கு கற்றுத் தருவதுடன் அவர்களுக்கு ஆலோச னையும் வழங்குவர்.
தென் மேற்கு வட்டார மேயரும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக தொழில் துணையமைச்சருமான லோ யென் லிங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
"நீரிழிவு ஏற்படுவதற்கான வாழ்நாள் ஆபத்து மூன்றில் ஒரு சிங்கப்பூரருக்கு உள்ளது. மேலும் இந்த நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை துரதிர்ஷ்டவசமாக 2050க்குள் ஒரு மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்றார் அவர்.

