ஜூரோங் லேக் வாட்டாரத்தை ஒருங்கிணைந்த பயணத்துறை பகுதியாக மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அதற்காக ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டது.
எனினும், இதுவரை இந்தத் திட்டத்தை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை.
இதன் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி அங்கு உயர்தர தங்குவசதியுடன் சில்லறை வர்த்தகம், உணவு, பான வர்த்தகம், பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய மேம்பாட்டுக்கான ஒப்பந்தப்புள்ளியை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கோரியிருந்தது.
ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க வேண்டிய ஏழு மாத கால அவகாசம் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
அந்தக் காலக் கெடுவுக்குள் எந்த ஒப்பந்தப்புள்ளியும் கிடைக்கப் பெறவில்லை என்று கழகம் கூறியுள்ளது.
இது பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த கழகத்தின் வருகையாளர் ஈர்ப்பு, பொழுதுபோக்கு, பயணத்துறை வடிவமைப்பு மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் ஆஷ்லின் லூ, "ஆண்டு முற்பகுதி யில் நிலவிய புவிசார் அரசியல், நிச்சயமற்ற பொருளியல் சூழல் நிலவரம் போன்றவை ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கும் முடிவை பாதித்ததாக இந்தத் திட்டத்தின் பங்காளிகள் கூறுகின்றனர்," என்று தெரிவித்தார்.
இதன் தொடர்பில், கழகம் சந்தை நிலவரம் தொடர்பான உணர்வுகளை தொடர்ந்து மதிப்பீடு செய்து பயணத்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராயும் என்றார்.
"ஜூரோங் அறிவியல் நிலையம், ஜூரோங் லேக் வட்டாரம் ஆகியவற்றுக்கு அருகில் இருக்கும் இந்தப் பகுதி, பயணத்துறை மேம்பட்டு வரும் இந்த நிலையில், சிறந்த எதிர்கால வாய்ப்புகள் உள்ள இடமாக விளங்குகிறது," என்று விளக்கிய திருவாட்டி லூ, இந்தப் பகுதி ஜூரோங் லேக் ஏரியின் 300 மீட்டர் நீர் முகப்பை ஒத்திருப்பதாகத் தெரிவித்தார்.
மேம்பாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி 10 காற்பந்துத் திடல்கள் அளவு கொண்டது.
அத்துடன், சைனிஸ் கார்டன் ரயில் நிலையத்துக்கு அடுத்தாற்போல் உள்ளது என்றும் அவர் விளக்கினார்.
இது குறித்து மார்ச் மாதம் விளக்கமளித்த கழகம், இந்தப் பகுதியின் மேம்பாடு தொழில்நுட்பம், கல்வி சார்ந்த பொழுதுபோக்கு, நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும் என்று திருவாட்டி லூ கூறினார்.

