செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
e7f27475-6e68-4336-a002-a15590c2d5c1
-

தனியார் வீட்டு விற்பனை சரிவு

நவம்பரில், தொடர்ந்து இரண்டாவது மாதமாக புதிய தனியார் வீட்டு விற்பனை சரிந்துள்ளது.

எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடு தவிர்த்து, நவம்பரில் 259 புதிய வீடுகள் விற்பனையாகின. இது அக்டோபர் மாதத்தின் 313 வீடுகளின் விற்பனை அளவைவிட 17% குறைவு. இது 2014 டிசம்பருக்குப் பிறகு மிகக் குறைந்த விற்பனை எண்ணிக்கையாகும். அப்போது 230 வீடுகள் விற்கப்பட்டன. 2021 நவம்பரில் விற்கப்பட்ட 1,547 வீடுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட இது 83% குறைவாகும்.

விற்பனைக்கு வெளியிடப்பட்ட புதிய தனியார் வீடுகளின் (இசி தவிர்த்து) எண்ணிக்கை அக்டோபரில் 102ஆக இருந்து நவம்பரில் 319ஆக உயர்ந்தது. இவற்றில் பல ஏற்கெனவே தொடங்கப்பட்ட திட்டங்களைச் சேர்ந்தவை என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ஆண்டு இறுதி மந்தநிலை, குறைந்து வரும் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையே பெரியளவிலான வீட்டுத் திட்டங்கள் தாமதமாவது இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

பள்ளிக் கைச்செலவு நிதிக்கு நன்கொடை

வசதி குறைந்த மாணவர்களுக்கான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதிக்கு கணக்கியல், வணிக ஆலோசனை நிறுவனமான 'பிடிஓ' சிங்கப்பூர் $50,000 தொகையை நன்கொடையாக வழங்கியது.

நிறுவனத்தின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 'பிடிஓ' சிங்கப்பூர் நிர்வாக பங்குதாரர் ஃபிராங்கி சியா இத்தொகைக்கான காசோலையை நேற்று தோ பாயோவிலுள்ள எஸ்பிஎச் நியூஸ் சென்டரில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதியின் பொது மேலாளர் டான் பீ ஹியோங்கிடம் வழங்கினார்.

'பிடிஓ' சிங்கப்பூர் அதன் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கிளப் ரெயின்போ, தை ஹுவா குவான் தாதிமை இல்லம், சிங்கப்பூர் பார்வையற்றோர் சங்கம் ஆகிய மூன்று அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்ட மெய்நிகர் ஓட்டத்தையும் நடையையும் ஏற்பாடு செய்தது.

தனிநபர் மொத்த மாத வருமானம் $690க்கு மேற்போகாத குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10,000 பிள்ளைகளுக்கும் இளையர்களுக்கும் ஆண்டுதோறும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளிக் கைச்செலவு நிதி கைச்செலவுக்கு பணம் கொடுக்கிறது.

'ஆப்பிள்' பயனாளருக்கு அறிவுறுத்து

ஐபேட், பழைய தலைமுறை ஆப்பிள் கருவிகளைப் பயன்படுத்துவோர், கருவிகளைப் பாதிக்கும் தீங்குநிரல் (மேல்வேர்) ஊடுருவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தங்கள் கருவிகளில் அண்மைய பாதுகாப்பு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

சஃபாரி, மின்னஞ்சல், ஆப் ஸ்டோர் போன்ற ஆப்பிள் செயலிகளுக்கு அதிகாரம் அளிக்கும் 'வெப்கிட்' என்ற உலாவி மென்பொருளை இது தாக்கும். அத்துடன் கருவியைப் பாதிக்கும் குறியீடுகளைப் பதிவிறக்கவும் அனுமதிக்கும் என்று சிங்கப்பூர் கணினிப் பாதுகாப்பு அவசரகால செயற்குழு (சிங்கெர்ட்) நேற்று முன்தினம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தகைய குறியீடுகள் கணினி ஊடுருவிகள் ஒரு கருவியில் கட்டளைகளை செயல்படுத்த அல்லது ஒரு பயனாளரின் தரவுகளைத் திருட அனுமதிக்கும்.

அடுத்த ஆண்டிலிருந்து இணையக் கூட்டங்களை நடத்த முடியாது

நிறுவனங்களும் வணிக அறக்கட்டளைகளும் வரும் 2023 ஜூலை 1ஆம் தேதி முதல் அதிகாரத்துவ கூட்டங்களை இணையம் வழி நடத்த முடியாது. கூட்டங்களுக்கான ஆணைகளை சட்ட அமைச்சு ரத்து செய்யவுள்ளது.

இணையம் வாயிலாக பல்வேறு வகையான நிறுவனங்கள் கூடவோ, கூட்டங்களை நடத்தவோ வகை செய்யும் கூட்டங்களுக்கான ஆணைகளை சட்ட அமைச்சு ரத்து செய்யவுள்ளது. நிறுவனங்களின் பொதுக் கூட்டங்கள், பதிவு செய்யப்பட்ட வணிக அறக்கட்டளையின் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கான கூட்டங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.

எழுத்துபூர்வமான சட்டம் அல்லது அவற்றின் நிர்வாக ஏற்பாடுகளுக்கு ஏற்ப கூட்ட ஏற்பாடுகளை மீண்டும் தொடங்க நிறுவனங்களுக்கு ஆறுமாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.