சிங்கப்பூருடனான இருதரப்பு உடன்பாட்டுக்கு இந்தோனீசிய நாடாளுமன்றம் ஒப்புதல்
இந்தோனீசிய நாடாளுமன்றம், தப்பியோடிய குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பில் சிங்கப்பூருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
அந்நாட்டு சட்ட, மனித உரிமைகள் அமைச்சர் யசொன்னா லாவ்லி நேற்று இந்தோனீசிய நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் அனைத்துலக ஒத்துழைப்பைக் குறிப்பதாகவும் இந்தோனீசிய அரசாங்கம் அதன் குடிமக்களுக்கு நீதியும் பாதுகாப்பும் வழங்குவதோடு உலக ஒழுங்குமுறையைக் கட்டிக்காப்பதற்கும் பங்களிப்பதைக் காட்டுவதாக அமைகிறது என்றார் அவர்.
இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தப்பியோடிய குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான உறுதியை இந்த ஒப்பந்தம் அளிக்கிறது என்று இந்தோனீசிய அமைச்சர் கூறினார்.
குற்றவியல் வழக்குகளுக்கு இதன்மூலம் அமலாக்க அதிகாரிகள் எளிதில் தீர்வுகாண்பர் என்றார் அவர்.
முன்னதாக இம்மாதம் 6ஆம் தேதி தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு இந்தோனீசிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் இந்தோனீசியாவின் இறையாண்மைக்கும் அதன் எல்லைக்கும் முழுமையாக மதிப்பளித்து அங்கு பயிற்சி மேற்கொள்ள வகைசெய்கிறது.
இவ்விரு உடன்பாடுகளும் 2007ஆம் ஆண்டே கையெழுத்தானபோதும் இந்தோனீசிய நாடாளுமன்றம் இதுவரை இவற்றுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
பிரதமர் லீயும் இந்தோனீசியாவின் அப்போதைய அதிபர் சுசிலோ பம்பாங் யுதயோனோவும் இவற்றில் கையொப்பமிட்டிருந்தனர்.
இவ்வாண்டு ஜனவரி 25ஆம் தேதி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் பின்தானில் சந்தித்தபோது, இவ்விரு உடன்பாடுகள் தொடர்பான கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தினர். மூன்றாவதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு தொடர்பான உடன்படிக்கை தொடர்பிலும் இணக்கம் தெரிவித்தனர்.
அனைத்துலக சட்டத்தின்கீழ் 1946ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்துத் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இந்தோனீசியாவின் ரியாவ், நட்டுனா தீவுகள் அமைந்துள்ளன.
புதிய உடன்பாட்டின் மூலம், ஏறக்குறைய 249,575 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அந்தப் பகுதியின் விமானப் போக்குவரத்துத் தகவல்களை இந்தோனீசியா சிங்கப்பூருக்கு வழங்கும்.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு செய்துகொள்ளப்படும் இந்த ஒப்பந்தம் பின்னர் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.

