டான் டோக் செங் மருத்துவமனையில் அடுத்த ஆண்டு முதல் சளிக்காய்ச்சல் அல்லது 'நிமோனியா' தொற்று ஏற்படும் அபாயம் அதிகமுள்ள வயதான நோயாளிகளுக்கு உதவும் புதிய திட்டம் அடுத்த ஆண்டு நடப்புக்கு வரவிருக்கிறது.
தாதியர் தலைமையில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம் படிப்படியாக மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகளுக்கான நிபுணத்துவ மருந்தகங்களில் நடப்புக்கு வரும்.
தற்போது ஏழு மருந்தகங்களில் முன்னோட்டமாகச் சோதிக்கப்படும் இம்முயற்சியின்கீழ் சில ஆண்டுகளுக்குள் மருத்துவமனையின் அனைத்து 32 மருந்தகங்களிலும் சேவை வழங்கப்படும் என்று டான் டோக் செங் மருத்துவமனையின் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் கேரன் கோமதி ராஜூ தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு அப்பால் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் இவ்விரு தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள இயலும். அவர்கள் அதற்கு வேறு மருந்தகத்தை நாடவேண்டும்.
இனி வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரின் மற்ற மருத்துவமனைகளும் இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடும்.
இதனை முன்னிட்டு உட்லண்ட்ஸ் ஹெல்த் வளாகத்தில் பணிபுரியும் தாதியர் சிலர் டான் டோக் செங் மருத்துவமனையில் பயிற்சி பெறுவதாக தொற்று நோய்களுக்கான தேசிய நிலையத்தின் மருத்துவ ஆலோசகர் யி ஸின்ஹுவா கூறினார்.
சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புப்படி 60 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டோரில் ஐந்தில் ஒருவர் சளிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஆனால் பத்தில் ஒருவர் மட்டுமே 'நிமோனியா' தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தனர்.
சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை ஆண்டுக்கு ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் 'நிமோனியா' தடுப்பூசியை ஒருமுறை செலுத்திக்கொண்டால் போதுமானது.