கிரேப் நிறுவனம் நிச்சயமற்ற பொருளியல் சூழலைச் சமாளிக்கும் நோக்கில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொள்வதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டனி டான் (படம்) தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான வேலைகளுக்கு ஆள்சேர்ப்பு நிறுத்தப்படும். மூத்த மேலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது. பயண, செலவுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படும் என்று ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இத்தகைய முடிவுகளை எடுத்தது எளிதாக இல்லை என்றபோதும் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய லாபகரமான வளர்ச்சியை நோக்கி நிறுவனம் விரைந்து முன்னேறும் வேளையில் இத்தகைய நடவடிக்கைகள் அவசியம் என்றும் திரு டான் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய கடிதத்தின் நகலைப் பார்வையிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அனைவரும் 2023ஆம் ஆண்டை வரவேற்கத் தயாராகிவரும் நிலையில் கிரேப் நிறுவன ஊழியர்கள் கூடுதல் சிக்கன மனப்போக்கைக் கடைப்பிடித்து, வருங்காலம் குறித்த அக்கறை கொண்டிருக்கவேண்டும் என்று திரு டான் கூறியுள்ளார்.
இவ்வாண்டுக்கான வருவாய் முன்னுரைப்பைச் சென்ற மாதம் கிரேப் நிறுவனம் உயர்த்தியது. சிறிதளவு செயல்முறை இழப்பையும் அது அறிவித்திருந்தது.
விலை உயர்வு, அதிகரிக்கும் வட்டி விகிதம், இவற்றால் பொருளியல் வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றைத் தென்கிழக்காசியா தவிர்க்க இயலாது என்று கூறிய திரு டான், சிக்கன நடவடிக்கைகள் தீவிர பாதிப்புகளில் இருந்து கிரேப் நிறுவனத்தைக் காக்க உதவும் என்றார்.
இந்த வட்டாரத்தின் எட்டு நாடுகளில் கிரேப் நிறுவனம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் கிரேப் நிறுவனத்தில் சென்ற ஆண்டு இறுதியில் ஏறக்குறைய 8,800 பேர் பணியாற்றினர்.