சிங்கப்பூர் சுங்கத்துறை இம்மாதம் 9ஆம் தேதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 9,000க்கு மேற்பட்ட பெட்டிகளில் இருந்த கள்ளச் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்பில் நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள். இவர்கள் 18 வயதிற்கும் 32 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.
சன்வியூ ரோட்டில் உள்ள தொழில்துறைக் கட்டடத்தில் 9,069 பெட்டிகளில் இருந்த கள்ளச் சிகரெட்டுகளை மறுபொட்டலமிடும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் இருந்து இச்சிகரெட்டுகளைப் பெற்றுக்கொண்டதாகவும் தங்களைப் பணியமர்த்தியவர்கள் யாரென்ற விவரம் தெரியாது என்றும் இவர்கள் கூறினர்.
லாரி ஓட்டுநர் எனச் சந்தேகிக்கப்படும் 40 வயது மலேசியர் துவாஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது லாரியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தக் கள்ளச் சிகரெட்டுகள் மூலம் ஏய்க்கப்பட்ட மொத்த வரித்தொகை ஏறக்குறைய $928,000 என்றும் இதில் $71,890 பொருள், சேவை வரி என்றும் அதிகாரிகள் கூறினர்.
வரி செலுத்தாமல் ஏமாற்றியது நிரூபிக்கப்பட்டால் ஏய்க்கப்பட்ட தொகையைப்போன்று 40 மடங்கு வரையிலான அபராதமோ ஆறாண்டு வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

