செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d6b67427-779c-4404-b131-0858b317e519
-

வாட்சன்ஸ் நிறுவனம்: ஊழியர்கள் அமரத் தடை விதிக்கவில்லை

வேலை நேரத்தில் எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் நிற்கவேண்டியிருப்பதால் உடல்நலச் சிக்கல்கள் ஏற்படுவதாக வாட்சன்ஸ் நிறுவனக் கடை ஊழியர்கள் சிலர் கூறியிருந்தனர். ஊழியர் உரிமைக்கான 'வொர்க்கர்ஸ் மேக் பாசிபிள்' குழுவிடம் எட்டுப் பேர் இதன் தொடர்பில் புகாரளித்திருந்தனர். இவர்களில் முன்னாள் ஊழியர்களும் அடங்குவர். குறிப்பாகக் காசாளர்கள் வேலை நேரம் முழுவதும் அமரக்கூடாதென மேற்பார்வையாளர்கள் வலியுறுத்துவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து 'வொர்க்கர்ஸ் மேக் பாசிபிள்' குழு, வாட்சன்ஸ் கடை ஊழியர்களின் நலனுக்காக சமூக ஊடகங்களில் இயக்கம் ஒன்றைத் தொடங்கியது. ஆனால் அவ்வாறு விதிமுறை ஏதும் இல்லை என்று கூறிய வாட்சன்ஸ் நிறுவனம் இதன் தொடர்பில் ஊழியர்களின் பரிந்துரைகளைத் திரட்டுவதாகவும் அதன் அடிப்படையில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

மூன்று வயதுச் சிறுமியை துன்புறுத்திய இல்லப் பணிப்பெண்

முதலாளியின் மூன்று வயது மகளைப் பலமுறை கிள்ளித் துன்புறுத்தியதை 39 வயது இந்தியப் பணிப்பெண் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பெயர், வசிப்பிடம் உள்ளிட்ட மேல்விவரங்களை வெளியிட அனுமதி இல்லை. கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து சிறுமியின் இல்லத்தில் வேலைபார்த்த பணிப்பெண் 2021ஆம் ஆண்டு மத்தியில் அவரைப் பலமுறை கிள்ளியது கண்காணிப்புக் கேமராப் பதிவின் மூலம் தெரியவந்தது. முதலில் பாலர் பள்ளியைச் சந்தேகித்த தாயார் காவல்துறையில் புகாரளித்தார். வேலையால் ஏற்பட்ட சோர்வில் சிறுமியைக் கிள்ளியதாகக் கூறிய பணிப்பெண்ணுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.