சிங்கப்பூர் பொருளியல் நிலவரம் மேலும் மோசமாகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை
சிங்கப்பூரின் முக்கியமான ஏற்றுமதிகள் கடந்த சில மாதங்களாக சரிந்துவரும் வேளையில் நவம்பரிலும் மேலும் மோசமானது. குறிப்பாக, மின்னணுவியல் துறையில் அது மோசமான சரிவை எதிர்கொண்டது என்று எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு நேற்று வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
அதை மேற்கோள் காட்டி, பொருளியல் நிபுணர்கள், பொருளியல் வளர்ச்சி மேலும் மோசமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
வரும் மாதங்களில் தேவை தொடர்ந்து மெதுவடையும்போது, சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சியை அது பாதிக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் நவம்பரில் 14.6% சரிந்தது. ஓராண்டுக்கு முன் அது உயர்ந்த நிலையில் இருந்தது என்றும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வளர்ச்சியைக் கண்டபின் வந்த பொருளியல் தொடர்ந்து இரண்டாவது மாதமாக சரிவைக் கண்டு வருகிறது என்றும் எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு கூறியது.
உலக அளவில் பகுதி மின்கடத்தியின் தேவை மிக அதிக அளவில், அதாவது $4.2 பில்லியனுக்கு வளர்ச்சி கண்டதால், 2021 நவம்பரில் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் நவம்பரில் 29.2% விரிவடைந்தது. பகுதி மின்கடத்தியின் 2021 மாத வளர்ச்சி $3.7 பில்லியனாக இருந்தது.
நவம்பரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி, புளூம்பர்க் நிறுவனம் முன்னுரைத்ததைக் காட்டிலும் 7.4% வீழ்ச்சி கண்டது.
மாத அடிப்படையிலான பருவத்துக்கேற்ப சரிசெய்யப்பட்ட எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி நவம்பரில் 9.2% சரிந்தது. அக்டோபர் மாதத்தில் அது 4.2% வீழ்ச்சி கண்டது.
ஆண்டு அடிப்படையில் நவம்பரில் மின்னணுவியல் துறை20.2% சரிந்தது. அக்டோபரில் அது 9.3% சரிந்தது. ஒருங்கிணைந்த மின்சாரக் கட்டமைப்புப் பகுதிகள், ஊடக வட்டுப் பொருள்கள், கணினி உதிரிப் பாகங்களின் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்ததே நவம்பர் மாதப் பொருளியல் சரிவுக்குக் காரணம்.
ஆண்டு அடிப்படையில், மின்னணுவியல் அல்லாத ஏற்றுமதி நவம்பரில் 12.8% குறைந்தது. அக்டோபரில் அந்தச் சரிவு 5.1% ஆக இருந்தது. நாணயமற்ற தங்கம், மருந்துகள், அடிப்படை ரசாயனப்் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறைந்ததே அம்மாதப் பொருளியல் சரிவுக்குக் காரணம்.
பருவத்துக்கேற்ப சரிசெய்யப்பட்ட எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி நவம்பரில் $14.3 பில்லியனைத் தொட்டது. அது முந்தைய மாதம் கிடைத்த $15.8 பில்லியனைவிட குறைவு. 2021 நவம்பரில் ஏற்றுமதி மூலம் $16.8 பில்லியன் கிடைத்தது.
சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதியின் முதல் பத்து சந்தைகளும் நவம்பரில் சரிந்தன. அவற்றில் ஆக மோசமாக பாதிக்கப்பட்ட ஹாங்காங்குக்கான ஏற்றுமதி 41% சரிந்திருந்தது. அதனை அடுத்த சீனாவின் ஏற்றுமதி 31.2 விழுக்காடும் வீழ்ச்சி கண்டது.
நவம்பரில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 0.5 விழுக்காடும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 7.3 விழுக்காடும் ஜப்பானுக்கான ஏற்றுமதி 6.6 விழுக்காடும் அதிகரித்தது எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தெரிவித்தது.