அல்கலைன் குடிநீர் வடிகட்டுதல் சாதனங்களின் சில்லறை விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு எதிராக சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் நீதிமன்ற ஆணைக்கு தாக்கல் செய்துள்ளது.
தனது அல்கலைன் குடிநீர் வடிகட்டுதல் சாதனங்கள் எலும்புறுக்கி நோய், புற்றுநோய், மூட்டுவலி, சிறுநீரகக் கோளாறு, நாள்பட்ட நோய்கள், சருமக் கோளாறுகள் போன்றவற்றைத் தடுக்கக்கூடும் அல்லது நிலைமையை மேம்படச் செய்யும் என்ற பொய்யான தகவல்களைத் டிரிப்பல் லைஃப்ஸ்டைல் மார்க்கெட்டிங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் கூறியது. இப்படிக் கூறி தனது சாதனங்களை விற்றுள்ளது என்று சிங்கப்பூர் வணிகப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் அதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குநரும் ஒரே பங்குதாரருமான திரு டான் ஜியா ஹுவாங் மீதும் பயனீட்டாளர் பாதுகாப்பு (நியாயமான வர்த்தகம்) சட்டத்தின்படி, ஆணையம் அரசு நீதிமன்றத்தில் நீதிமன்ற ஆணை பிறப்பிக்குமாறு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளது.
இந்நிறுவனம் குடிநீர் விநியோகச் சாதனம், அல்கலைன் குடிநீர் வடிகட்டுதல் சாதனம் ஆகியவற்றை விற்பதுடன் அவற்றின் பராமரிப்புத் தொகுப்புகளையும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது.
தனது வர்த்தக நடவடிக்கைகளை அந்நிறுவனம் உடனடியாக நிறுத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆணையம் கோருகிறது.
மேலும் தனது சாதனங்களுக்கு தாம்சன் மருத்துவ நிலையம் அங்கீகாரம் வழங்குகிறது என்றும் தனது குடிநீர் விநியோகச் சாதனம் குறிப்பிட்ட காலத்துக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் பராமரிப்புத் தொகுப்புத் திட்டத்தின்படி தான் விற்கும் சாதனங்கள் இலவசமாக பழுதுபார்க்கப்படும் அல்லது பரா மரிக்கப்படும் என்றும் பொய்யான தகவல்களை வாடிக்கையாளர்களிடம் அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஜனவரி 2020 முதல் டிசம்பர் 2020 வரை டிரிப்பல் லைஃப்ஸ்டைல் மார்க்கெட்டிங் நிறுவனம் சாதனங்கள் உத்தரவாத காலத்துக்கு உட்பட்டிருந்தும் தனது பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலித்திருக்கிறது.
இவ்வாண்டு ஏப்ரலில், வாடிக்கையாளர்களின் புகார்களின் பேரில், சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் டிரிப்பல் லைஃப்ஸ்டைல் மார்க்கெட்டிங் நிறுவனத்துக்கு இரண்டாவது முறையாக எச்சரிக்கை விடுத்தது.
இது குறித்து கருத்துரைத்த சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங், "இந்நிறுவனம் தனது ஒப்பந்த விதிமுறைகளை பலமுறை மீறியுள்ளது என்றும் சாதனங்களை விற்பனை செய்யும்போது $3,000 வரை விற்பனைத் தொகுப்புத் திட்டம் என்று கூறி தங்களை ஏமாற்றியுள்ளது என்றும் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.
"வீடு வீடாக சென்று பொருள்களை விற்போர் பற்றி வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்க வேண்டும் என்று அவர்கள் உங்களை வற்புறுத்தக்கூடாது. மேலும் அவர்களை வீட்டினுள் அனுமதிக்க வேண்டாம்.
"சிங்கப்பூர் கேஸ்டிரஸ்ட் நேரடி விற்பனைச் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற விற்பனை நிறுவனங்களிடமிருந்து பொருள்களை வாங்குமாறு வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.
பொருள்களை விற்கும் நிறுவனங்கள் பற்றி புகார் அளிக்க வாடிக்கையாளர்கள் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்துடன் தொடர்புகொள்ளலாம்," என்றும் தெரிவித்தார்.

