சிங்கப்பூரில் பிறந்த சஷி செல்லையா 'பாண்டான் கிளப்' என்ற உயர்தர (ஃபைன் டைனிங்) உணவகம் ஒன்றை சென்னையில் திறந்துள்ளார். அவர் 2018இல் 'மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா' என்ற பிரபலமான சமையல் போட்டியின் வெற்றியாளர்.
சென்னையின் அனைவருக்கும் தெரிந்த தியாகராய நகர் பகுதியில் இந்த உணவகம் இம்மாதத் தொடக்கத்தில் திறக்கப்பட்டது.
இந்த உணவகத்தில் 94 பேர் அமர்ந்து சாப்பிடும் வசதி உண்டு. இங்கு 'நோன்யா' (பெரானாக்கான்) சாப்பாடு விற்கப்படுகிறது. சீன, மலாய், ஐரோப்பிய, தென் இந்தியா கலப்பு சமையல் வகை இந்தியாவில் கிடைப்பது அரிது.
தென் இந்தியாவில் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரின் தொழில் நண்பர் மனோஜ் பத்மநாபனும் மதியுரைஞர் சந்தேஷ் ரெட்டியும் சென்னையில் இருப்பதாகவும் சஷி குறிப்பிட்டார்.
இதனால்தான் சென்னையில் உணவகத்தைத் திறக்க முடிவு செய்ததாக சஷி 'சவுத் சீனா மோர்னிங் போஸ்ட்' பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
கலாசாரம், காலத்தால் அழியாத சுவை, அதே சமயத்தில் மாற்றங்களையும் புதியவற்றையும் சோதித்துப்பார்க்க பயப்படாத ஊர் சென்னை என்று சஷி கூறினார். இதனால் அவரது உணவகத்தைத் திறக்க இந்தியாவில் இது சிறந்த இடம் என்றும் குறிப்பிட்டார்.
மலாக்கா, பினாங்கு போன்ற இடங்களில் குடியேறியுள்ள ஆதி சீனர்கள் மலாய் கலாசாரத்துடன் கலந்து உருவான உணவுவகைதான் நோன்யா உணவு.
புளிக்க வைக்கப்பட்ட சமையல் முறை, 'உமாமி' சுவை கலந்து, இந்திய உணவு சுவையைப் போல் உள்ளதால், இந்த உணவு வகையை சென்னைக்கு எடுத்து செல்ல சஷி முடிவு செய்தார்.
இரு கலாசாரங்களிலும் ஒரே மாதிரியான உணவுப் பொருள்கள் பயன்படுத்தபடுவதையும் சஷி சுட்டினார்.
இந்தியர்களுக்கு பழக்கப்பட்ட தேங்காய் பால், மிளகாய் போன்ற உணவுப் பொருள்களுடன் எலுமிச்சை தழை, இஞ்சி போன்றவற்றுடன் கலந்த உணவை இவர் அறிமுகப்படுத்துகிறார்.
வெவ்வேறு நாடுகளின், வட்டாரங்களின் தனித்துவமான சுவைகளும் வேற்றுமைகளும் கலந்ததுதான் இந்திய உணவு. இதில், மலாய் உணவுக்கும் இந்திய உணவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன என்று சஷி கூறினார். இரண்டு உணவு வகைகளும் மசாலா, தாளிப்பு வகைகளை முன்னிலைப்படுத்துகின்றன.
'பாண்டான் கிளப்' பாரம்பரிய 'லேண்டர்ன்' விளக்குக் கூண்டுகள், 'பெரானாக்கான்' தொடர்பான அலங்காரங்கள் போன்றவையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கை வேலைப்பாடுடன் கூடிய 'செராமிக்' கற்கள், பிரம்பு வகை அலங்காரங்களையும் இந்த உணவகத்தில் காணலாம். சிங்கப்பூரிலுள்ள ஜூ சியாட் சாலையில் காணப்படும் கலாசாரத்தையும் பாரம்பரிய கட்டடங்களையும் நவீன முறைகளில் பிரதிபலிக்கும் வகையில் இந்த அலங்காரங்கள் உள்ளன.
'கேண்டல் நட்ஸ்' (Candle Nuts), பாண்டான் சாறு, நெத்திலி மீன் உள்ளிட்ட 30 வகையான பொருள்களை சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலிருந்து இந்த உணவகம் இறக்குமதி செய்கிறது.
'ரொட்டி ஜலா', பீன்கர்ட் தோல் 'ஸ்ப்ரிங் ரோல்' போன்ற உணவு வகைகள் இந்த உணவகத்தில் கிடைக்கும். 'புவா கெலுவாக்' என்ற காளான் வகையுடன் தயாரித்த ஆட்டுக் கறியையும் இந்த உணவகத்தில் சுவைக்கலாம். பாண்டான் கிளப்பில் உள்ள இனிப்பு பதார்த்தங்களில் தேங்காய்ப்பால் 'ஐஸ் கிரிம் சேன்விச்'சும் ஒன்று.
"நான் சிங்கப்பூரில் பள்ளியில் படிக்கும்போது, இதை அடிக்கடி சாப்பிடுவேன்," என்று சஷி கூறினார். இதற்கு முன் சஷி 12 ஆண்டுகளாக சிங்கப்பூர் காவல்துறையில் பணிபுரிந்தார். சமையல் மீதான ஆர்வத்தால் அவர் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்.
2018இல் இவர் சமையல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, மெல்பர்ன் நகரில் தனது முதல் உணவகத்தைத் திறந்தார். 'காஜா பை சஷி' என்ற இந்த உணவகத்தில் தெற்காசிய உணவும் இந்திய உணவும் கலப்பு முறையில் பரிமாறப்படுகிறது. இந்திய, மலாய், சீன கலாசாரங்களை கலந்த உணவுகளை சமைப்பதில் 43 வயதான இவர் பிரபலம் அடைந்தார்.
'வோர்ல்ட் ஆன் எ பிளேட்' என்ற நீண்டகாலமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சஷி டெல்லி, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். உணவு வகைகளை சமூக, கலாசார வரலாற்றை ஆராயும் இந்த நிகழ்ச்சியில் சஷி ஏழு வகை உணவு விருந்தைத் தயாரித்தார்.
மாஸ்டர் செஃப் போட்டியை வென்றது தமது வாழ்க்கையை மாற்றியுள்ளது என்று சஷி ஒப்புக்கொண்டார்.
போட்டியில், 24 போட்டியாளர்கள், நீதிபதிகளிடம் சுவை பற்றி கற்றுக்கொண்டதையும் சஷி பகிர்ந்துகொண்டார்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் தமது உணவகங்களை சஷி விரிவு படுத்தி, புதிய உணவகங்களைத் திறக்க விரும்புகிறார்.
பாண்டான் கிளப் உணவகத்தை மற்ற நகரங்களில் திறக்கவும் இவர் விரும்புகிறார். அவரின் முதல் சமையல் நூல் 'கம்போங் பாய்' அண்மையில் வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் வீதியோரக் கடைகளில் விற்பனையாகும் உணவு வகைகளின் செயல்முறை பற்றியது இந்த நூல்.