தற்போதைய பொருளியல் நிலவரத்தைக் கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து ஆதரவு பெறும் வகையில் கொவிட்-19 மீட்சி மானிய விண்ணப்ப காலம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது.
வருமானத் தகுதி போன்ற குறிப்பிட்ட சில அளவுகோல் சரிசெய்யப்பட்டு, அதிக ஆதரவு தேவைப்படுவோருக்கு உதவி வழங்கப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகமான இந்த மானியம், குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்கு தற்காலிக நிதி ஆதரவை அளிக்கும். அவர்கள் பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளியல் மந்தநிலையால் வேலையிழந்தவராக, சம்பளமில்லா விடுப்பில் இருப்பவராக, வருமானம் இழந்தவராக இருக்க வேண்டும்.
இந்த மானியத்தின் மூலம் ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்களுக்கும் தங்கள் வேலை குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டவர்களுக்கும் மாதம் $700 வீதம், மூன்று மாதங்களுக்கு உதவி கிட்டும்.
குறிப்பிடத்தக்க அளவில் வருமான இழப்பு, வர்த்தக வருமான இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் $500 வீதம், மூன்று மாதங்களுக்கு உதவி வழங்கப்படும்.
"கொவிட்-19 தொற்றுடன் வாழவேண்டும் எனும் வாழ்க்கைப் போக்குக்கு சிங்கப்பூர் மாறிவிட்டாலும் சிலர் இன்னும் நிதிப் பிரச்சினைகளாலும் வேலை பிரச்சினைகளாலும் அவதியுறுகின்றனர். இதன் காரணமாகத்தான் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவும் வகையில் கொவிட்-19 மீட்சி மானியத்துக்கான விண்ணப்ப காலம் இன்னோர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது," என்று அமைச்சின் அறிக்கை கூறியது.
கொவிட்-19 மீட்சி மானிய விண்ணப்ப காலம் நீட்டிக்கப்படுவது இது இரண்டாவது முறை. முதலாவது விண்ணப்ப காலம் இம்மாதம் 31ஆம் தேதி வரை முடிவடையவிருந்தது.
டிசம்பருக்குப் பிறகு விண்ணப்ப காலம் நீட்டிக்கப்படாது என்று கடந்த செப்டம்பரில் அமைச்சு அறிவித்திருந்தது. இருப்பினும் பொருளியல் நிலவரத்தை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வந்தது.
ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு கிடைக்கும் உதவி குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படும்.
இந்த மானியத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://go.gov.sg/CRG எனும் இணையப் பக்கத்தை நாடலாம்.

