பிடோக் ரெசர்வோர் சாலையில் உள்ள புளோக் 742ல் இருக்கும் மிஸ்பர் பிராட்டா உணவகத்தில் தாம் ஆர்டர் செய்த உணவு இன்னும் தயாராகததால் கோபமடைந்த இம்ரான் ஒத்மான் உணவக ஊழியரைப் பார்த்து உரக்க கத்தினார். பிறகு கத்தி ஒன்றைப் பயன்படுத்தி, உணவகத்தில் உணவருந்திகொண்டிருந்த இருவரை அவர் காயப்படுத்தினார். அவர்களில் ஒருவர் இம்ரானை அமைதிப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.
43 வயது திரு டெரிக் குவாவை வயிற்றில் இம்ரான் கத்தியால் குத்தினார். 31 வயது ஜேசன் கோவையும் அவர் கத்தியால் காயப்படுத்தினார். அதன்பிறகு அவ்விடத்திலிருந்து தப்பி ஓடினார்.
மூன்று நாள்கள் கழித்து, கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று இம்ரானை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்த போதைப்பொருள் பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
இம்ரான் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்தது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை 47 வயது இம்ரான் ஒப்புக்கொண்டார். அவருக்கு மூன்று ஆண்டுகள், ஐந்து மாதங்கள், இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
காயமடைந்த திரு குவாவுக்கு சாங்கி பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு ஐந்து நாள்களுக்கு அனு
மதிக்கப்பட்ட அவருக்கு 20 நாள்கள் மருத்துவமனை விடுப்பு வழங்கப்பட்டது. திரு கோவுக்கு மருந்தகம் ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் விசாரணை மூலமாகவும் இம்ரான் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

