சிங்கப்பூரின் தென்மேற்கு வட்டாரத்தில் வசிக்கும் 8,000 வசதி குறைந்த குடும்பங்களுக்கு இம்மாதத்துக்கும் பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பண்டிகைக் கால அன்பளிப்புப் பைகள் வழங்கப்படும். ஒவ்வொரு அன்பளிப்புப் பையின் மதிப்பு ஏறத்தாழ $100.
ஃபெஸ்டிவ் சியர்ஸ்@சவுத் வெஸ்ட் எனும் வருடாந்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாக வசதி குறைந்த குடும்பங்களுக்கு இந்த அன்பளிப்புப் பைகள் வழங்கப்படுகின்றன.
பண்டிகைக் காலத்தின்போது வசதி குறைந்த குடும்பங்களும் மகிழ்ச்சியுடன் இருக்க இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அன்பளிப்புப் பைகளுக்கு கோ கொக் லியோங் என்டர்பிரைஸ், புரோக்டர் அண்ட் கேம்பல் சிங்கப்பூர், மீட்டா நல்வாழ்வுச் சங்கம் ஆகியவை ஆதரவு வழங்கின.
அன்பளிப்புப் பைகளில் அரிசி, பீ ஹூன், பானங்கள் தயாரிப்பதற்கான தூள், உயிர்ச்சத்துகள், பல் தேய்க்க பயன்படுத்தப்படும் தூரிகை, ஷாம்பூ போன்ற தனிப்பட்ட சுகாதாரப் பொருள்கள் ஆகியவை உள்ளன.
முதல் 300 அன்பளிப்புப் பைகளை வாடகை வீடுகளில் தங்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு தென்மேற்கு வட்டார மேயர் லோ யென் லிங்கும் வர்த்தக, தொழில் அமைச்சரும் சுவா சூ காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கான் கிம் யோங்கும் நேற்று நேரில் சென்று விநியோகித்தனர்.
எளிதில் பாதிப்படையக்கூடிய குடியிருப்பாளர்களுக்கு ஆதரவு தர சமூகம் ஒன்றிணைவதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்று அமைச்சர் கான் தெரிவித்தார்.
"வசதி குறைந்த குடும்பங்
களின் செலவினத்தைக் குறைக்க இவ்வாண்டின் ஃபெஸ்டிவ் சியர்ஸ்@சவுத் வெஸ்ட் திட்டம் உதவுகிறது. பரிவுமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சியில் மேலும் பலர் உதவ முன்வர வேண்டும் என்று விரும்புகிறோம்," என்றார் அமைச்சர் கான்.
அன்பளிப்புப் பைகளை தயார் செய்து அவற்றை விநியோகிக்கும் பணியில் சிங்கப்பூர் அறிவுத்திறன் குன்றியோர் இயக்கத்தைச் சேர்ந்த 50 தொண்டூழியர்கள் ஈடுபட்டனர்.
மைண்ட்ஸ் பள்ளியைச் சேர்ந்த தொண்டூழியர்கள் இம்முறை இத்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் இது திட்டத்துக்குச் சிறப்பு சேர்த்திருப்பதாகவும் திருவாட்டி லோ கூறினார்.
"தங்களுக்குப் பல சிரமங்கள் இருக்கும்போதிலும் இவ்வுலகை மேலும் சிறப்பான இடமாக்க அவர்கள் காட்டும் முனைப்பு நம் அனைவருக்கும் ஊக்குவிப்பாக அமைகிறது. தென்மேற்கு வட்டார சமூகத்தை வடிவமைக்கும் பரிவு, அனைவரையும் உள்ளடக்கும் உணர்வை மைண்ட்ஸ் பள்ளியைச் சேர்ந்தோரின் தொண்டூழியச் சேவை பறைசாற்றுகிறது," என்றார் திருவாட்டி லோ.

