மறுசுழற்சி தொட்டியில் சேர்த்து $10 ஈட்ட பொங்கோல்வாசிகளுக்கு வாய்ப்பு
பொங்கோல்வாசிகளுக்காக ஒரு புதிய முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. காலியான, கழுவாத, கனமான பிளாஸ்டிக் போத்தல்களை மறுசுழற்சிக்கு அதிகமாக பயன்படச் செய்வது அந்தத் திட்டத்தின் நோக்கம்.
செம்ப் வேஸ்ட் நிறுவனமும் சிங்கப்பூர் பலதுறை தொழில்கல்லூரியும் மூன்று மாத முடிவில் 18,000 போத்தல்களை மறுசுழற்சிக்குப் பயன்படுத்திவிட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளன.
பொங்கோல் கோரல் குடியிருப்புப் பேட்டையில் வைக்கப்பட்டு உள்ள மறுசுழற்சி குப்பைதொட்டிகளில் சேகரமாகும் பொருள்களில் சுமார் 52 விழுக்காடு கெட்டுப்போனவையாக அல்லது மறுசுழற்சிக்குப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன என்பதை செம்ப் வேஸ்ட் நிறுவனம் கண்டுபிடித்தது.
அதனையடுத்து இம்முன்னோடித் திட்டம் தொடங்கப்படுகிறது. அப்படிச் சேகரமாகும் மறுசுழற்சி குப்பைகளில் 1% பிளாஸ்டிக் போத்தல்களாக (PET) இருக்கின்றன.
சிங்கப்பூர் முழுவதும் பார்த்தால், மறுசுழற்சிக்குப் பயன்படக்கூடிய பொருள்களைக் கெட்டுப்போய்விடச் செய்யும் போக்கு அதிகமாக உள்ளது. இதனால் மறுசுழற்சி விகிதத்தை அதிகரிக்க இயலவில்லை. இந்த விகிதம் 2021ல் 13% ஆக இருந்தது.
பொங்கோல் கோரல் குடியிருப்புப்பேட்டையில் மறுசுழற்சிப் பொருள்கள் வீணாகும் விகிதத்தைக் குறைந்தபட்சம் 10% குறைப்பது இந்த முன்னோடித் திட்டத்தின் இலக்கு. அத்தகைய போத்தல்களைப் போடுவதற்கான தொட்டிகள், பொங்கோல் கோரல் பேட்டைக்குள் 10 புளோக்குகளில் உள்ளன.
பொங்கோல் ஷோரில் இருக்கக்கூடிய பிரைம், அங் மோ பேரங்காடிகளிலும் பொங்கோல் சென்ட்ரலில் உள்ள ஷெங் சியோங் கடையிலும் அந்தத் தொட்டிகள் உள்ளன.
முன்னோடித் திட்ட முடிவில் பொங்கோல் கோரல் குடியிருப்புப் பேட்டைகளில் அத்தகைய தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ள 10 புளோக்குகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு, அந்தக் குடும்பங்களின் புளோக்கில் ஆக அதிக போத்தல்கள் சேர்த்திருந்தால் $10 வெகுமதி பற்றுச்சீட்டு கிடைக்கும்.
முன்னோடித் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் தங்களுடைய புளோக்கில் தொட்டி அமைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
புதிய முன்னோடித் திட்டத்தில் பயன்படுத்தப்படும் தொட்டிக்கு 'ரிபாட்டில்' என்று பெயர்.
அதை சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கி இருக்கிறார்கள்.
மறுசுழற்சி பற்றி போதிய அளவுக்குத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது, பல்வேறு வகை குப்பை தொட்டிகளை வேறுபடுத்தி பார்க்கத் தெரியாமல் இருப்பது, போத்தல்களைக் கழுவவேண்டி இருப்பதால் ஏற்படக்கூடிய சங்கடம் ஆகியவை மறுசுழற்சிக்கு குடியிருப்பாளர்கள் தயங்குவதற்கு முக்கிய காரணங்களாகத் தெரிவிக்கப்படுவதாக இந்தக் கல்லூரியில் படிக்கும் அயிஷா முகம்மது குஷ்னன், 19, என்ற மாணவி கூறினார்.
ஆனால், இந்த முன்னோடித் திட்டத்தின்படி, கழுவாமலேயே போத்தல்களை மறுசுழற்சி தொட்டியில் சேர்த்துவிடலாம் என்று செம்ப் வேஸ்ட் தெரிவித்துள்ளது.

