சிங்கப்பூரை மனதில் நிறுத்தி செயல்படுவதால்தான் மலைபோன்ற சவால்களை எல்லாம் சமாளித்து சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தலைவர்கள் தீர்வு காண்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் யாக்கூப் இப்ராகிம் தெரிவித்தார்.
பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தால் அதற்கு இந்தப் பணி ஒத்துவராது என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் உலக இளம் தலைவர்கள் உச்சநிலை மாநாடு நேற்று தொடங்கியது. அந்த மூன்று நாள் மாநாட்டின் தொடக்கத்தில் இளையர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.
அதில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு டாக்டர் யாக்கூப் பதில் அளித்தார்.
உயர்நிலைப் பள்ளிகள், உயர் கல்வி நிலையங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களும் 'டியர் ஏஷியன் யூத் சிங்கப்பூர்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களுமாக 24 பேர் அந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த அமைப்பு, அனைத்துலக அளவில் இளையர்கள் தலைமையில் செயல்படும் 'டியர் ஏஷியன் யூத்' என்ற அமைப்பின் பிரிவாகும்.
இந்த அமைப்பு, சமூகச் சேவை, சமத்துவம், நியாயம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
மாநாடு சென்ற ஆண்டில் மெய்நிகர் ரீதியில் நடந்தது.
முன்னாள் அமைச்சரான டாக்டர் யாக்கூப், 1997ல் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்து எடுக்கப்பட்டவர். அமைச்சர் பதவிகளை வகித்தவர்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் சேவையாற்றியவர். டாக்டர் யாக்கூப், 2020ஆம் ஆண்டில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
சிக்கலான இன்றைய உலகில் இளையர்கள் திறந்த மனதுடன் திகழவேண்டும். அவர்கள் நிறைய படிக்க வேண்டும் என்று வேறு ஒரு மாணவரின் கேள்விக்கு அளித்த பதிலில் டாக்டர் யாக்கூப் தெரிவித்தார்.
"சிங்கப்பூரை அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்லக்கூடிய அடுத்த தலைமுறையின் அங்கமாகத் திகழும் வகையில் உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.
"இதற்குப் பள்ளிக்கூடங்களில் படிப்பது மட்டும் போதாது. அதற்கு அப்பாலும் நீங்கள் கற்க வேண்டும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
உச்சநிலைக் கூட்டத்தில் 230 பேர் கலந்துகொண்டனர். நடப்பு விவகாரங்களில் தாங்கள் நாட்டத்துடன் இருப்பதால் இதில் கலந்துகொண்டதாக பலரும் கூறினர்.
இதனிடையே, தேசிய இளையர் மன்றத்தின் ஒரு பிரிவான சிங்கப்பூர் இளையர் படை, இந்த ஆண்டில் தான் மேற்கொண்ட தொண்டூழியப் பணிகளை விளக்கியது.
இந்த அமைப்பு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இந்த ஆண்டு மேற்கொண்ட செயல்திட்டங்களில் 6000 இளம் தொண்டூழியர்கள் கலந்துகொண்டனர்.

