பூன் லே வட்டாரத்தில் உள்ள ஒரு புளோக்கின் 22வது மாடியிலிருந்து பூனையைத் தூக்கி எறிந்த சிறுவன் தனது குடும்பத்தார் தன்னிடம் அன்பு காட்டாததால் அவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளான்.
மாண்ட பூனை அந்த வட்டாரத்தில் பல ஆண்டுகளாக இருந்துவந்ததாக குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார். அதை 'Panther' என்று குடியிருப்பாளர்கள் செல்லமாக அழைத்துவந்ததாக அவர் கூறினார். பூனைக்கு 15 வயது இருக்கும் எனக் கூறப்பட்டது.
சிறுவனை தான் அணுகியபோது, அவன் முதலில் பூனையைத் தூக்கி எறிந்ததை மறுத்ததாக குடியிருப்பாளர் Cai Mei Mei என்பவர் சொன்னார். அவனை மீண்டும் கேட்டபோது பூனையைத் தூக்கி எறிந்ததை அவன் ஒப்புக்கொண்டதாக Mei Mei கூறினார். தனது குடும்ப உறுப்பினர்கள் தன்னிடம் அன்பு காட்டாத காரணத்தினால் அவ்வாறு செய்தாக அவன் குறிப்பிட்டுள்ளான்.
அந்த வட்டாரத்தில் கடந்த ஈராண்டுகளில் குறைந்தது ஐந்து பூனைகள் உயரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்தச் செயல்கள் வேண்டுமென்றே செய்யபட்டனவா அல்லது இது விபத்தா என்று உறுதிப்படுத்தபடவில்லை.
சிறுவனுடைய வீட்டுக்குச் சென்ற சாவ்பாவ் நிருபர், சிறுவனுடைய தந்தையுடன் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விசாரணை நடத்திவருவதாகவும் மற்ற தகவல்களை அவர் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


