இந்தியக் கலைவிழாவின் அங்கமான 'கலா உத்சவம் 2022'ஐ முன்னிட்டு மரபு என்னும் கலைக் கொண்டாட்டம் நவம்பர் 18 முதல் 20 வரை எஸ்பிளனேட் கடலோரக் கலை அரங்கில் நடைபெற்றது. உள்ளூர் எழுத்தாளர் அல்ஃபியான் சா'ஆட் என்பவரின் கதைக்கேற்ப இசைக்கலைஞர் பிவி பலசை இசையில் இப்படைப்பு அரங்கேறியது.
கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் 11 நடனமணிகள் மிக எழிலாக ஆடினார்கள். நடன அமைப்பாளர் மீனாட்சி பாஸ்கர் இயற்றிய நடனத்தில் நடனமணி ஒவ்வொருவரும் ஒத்திசைக்கப்பட்டு, கலாசாரப் பதக்கம் பெற்ற காலஞ்சென்ற சாந்தா பாஸ்கரின் வாழ்க்கை வரலாற்றை ஒன்றரை மணி நேரப் படைப்பில் சித்திரித்தனர்.
நடனமணிகளில் ஒருவர் சாந்தா பாஸ்கராகவும் இதர பத்து நடனமணிகள் சாந்தா பாஸ்கரின் வாழ்க்கையில் இடம்பெற்ற கதாபாத்திரங்களாகவும் பிரதிநிதித்தனர். நடன வடிவத்தில் திருமதி சாந்தா பாஸ்கரின் வாழ்க்கை வரலாற்றை பார்வையாளர்களுக்குக் கூறியது, இந்தப் படைப்பின் சிறப்பு அம்சமாகும். ஒவ்வொரு நடனத்திற்கு முன்பும் திருமதி சாந்தா பாஸ்கர் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி இதற்கு முன்னர் பேட்டி அளித்த ஒலிப்பதிவும் காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டன.
கலைப் பயணத்தில் திருமதி சாந்தா பாஸ்கர், பரதநாட்டியம் தவிர்த்து, சிங்கப்பூரில் இருக்கும் போது, சீன, மலாய் பாரம்பரிய நடனங்களையும் கற்று வந்தார். அதனை நினைவூட்டும் வகையில், நடனமணிகள் ஆடிய சில நடனங் களில், சீன, மலாய் தாக்கங்கள் இடம்பெற்றிருந்தன. கலைத்துறையில் இருப்பவர்கள், திருமதி சாந்தா பாஸ்கரின் மாணவர்கள், நடனக் கலைஞர்கள் என பலரும் பார்வையிட்ட இந்தப் படைப்பு, ஒரு நினைவலையாக அமைந்தது.
அந்த வகையில், திருமதி சாந்தா பாஸ்கரின் முன்னாள் மாணவியான 73 வயது திருவாட்டி கலா வடிவேல் என்பவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
பத்து ஆண்டுகள் திருமதி சாந்தா பாஸ்கரிடம் பரதநாட்டியம் கற்ற இவர், நடனமணிகளின் படைப்பு தம்மை நெகிழ வைத்தது என்றார். மேலும், திருமதி சாந்தா பாஸ்கரின் குரலை காணொளியில் கேட்டபோது தாம் உணர்ச்சி வசப்பட்டதாகக் கூறி கண்ணீர் வடித்தார்.
சாந்தா பாஸ்கராக நடனமாடிய ஷிவாஸ்னி குமார், 38, தமக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது பெருமிதமாக இருந்தது என்றார்.

