வாரம் ஒரு மில்லியன் பேர் சாங்கி வழியாக பயணம்

வாரம் ஒரு மில்லியன் பேர் சாங்கி வழியாக பயணம்

2 mins read
72e8d6c0-60d6-4e08-a748-4003ffefa437
-

சாங்கி விமான நிலை­யத்­திற்கு ஒரு வாரத்­தில் ஏறக்­கு­றைய ஒரு மில்­லி­யன் பய­ணி­கள் வந்து செல்­கின்­ற­னர். கொவிட்-19 கிரு­மிப் பர­வலுக்கு முன்­பி­ருந்­த­தில் இது கிட்­டத்­தட்ட 75 விழுக்­காடு என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஏப்­ரல் மாதம் சிங்­கப்­பூர் தடுப்­பூசி செலுத்­திக்­கொண்­டோ­ருக்கு மட்­டும் அதன் எல்­லை­களை மீண்­டும் திறந்­த­போது இருந்­த­தைக் காட்­டி­லும் இந்த எண்­ணிக்கை இரு மடங்­குக்கு மேல்.

கூடு­தல் பய­ணி­க­ளைச் சமா­ளிக்­கத் தேவை­யான அளவு சாங்கி விமான நிலை­யம் தயார்­நி­லை­யில் இருப்­ப­தாக அமைச்­சர் ஃபேஸ்புக்­கில் நேற்று குறிப்­பிட்­டார்.

செப்­டம்­பர் மாதம் 13ஆம் தேதி நான்­காம் முனை­ய­மும் அக்­டோ­பர் 11ஆம் தேதி இரண்­டாம் முனை­யத்­தின் தென்­ப­கு­தி­யும் மீண்­டும் திறக்­கப்­பட்­டதை அவர் சுட்­டி­னார்.

இந்த ஆண்­டின் முதல் பத்து மாதங்­களில் 23.6 மில்­லி­யன் பய­ணி­கள் சாங்கி விமான நிலை­யத்­திற்கு வந்து சென்­றுள்­ள­னர். இவர்­களில் 3.69 மில்­லி­யன் பேர் அக்­டோ­பர் மாதத்­தில் பய­ணம் செய்­த­வர்­கள்.

இம்­மா­தத்­தின் முதல் வார நில­வரப்­படி சாங்கி விமான நிலை­யத்­தில் 95 விமான நிறு­வ­னங்­கள் 5,500க்கு மேற்­பட்ட விமா­னச் சேவை­களை வழங்­கின.

சிங்­கப்­பூ­ரில் இருந்து கிட்­டத்­தட்ட 140 நக­ரங்­க­ளுக்கு அவை சேவை வழங்­கி­ய­தா­கக் குழு­மம் கூறி­யது.

ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா, இந்­தோ­னீ­சியா, மலே­சியா, தாய்­லாந்து ஆகிய நாடு­க­ளுக்கு அதி­க­மா­னோர் பய­ணம் செய்­த­னர். வட அமெ­ரிக்கா, தெற்­கா­சியா, ஐரோப்பா ஆகி­ய­வற்­றுக்­கான பய­ணி­கள் எண்­ணிக்கை மிக வலு­வாக மீட்சி கண்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

சொல்­லப்­போ­னால் கொவிட்-19 கால­கட்­டத்­திற்கு முன்­பி­ருந்­த­தை­விட அதிகமானோர் வட அமெ­ரிக்­கா­வுக்கு இவ்­வாண்­டின் முதல் பத்து மாதங்­களில் பய­ணம் செய்­தது தெரியவந்துள்ளது.

தெற்­கா­சிய வட்­டா­ரத்­தில் பழைய விமா­னச் சேவைத் தடங்­கள் அனைத்­தும் மீண்­டும் செயல்­ப­டத் தொடங்­கி­ய­து­டன் புதி­தாக இம்­மா­தம் 2ஆம் தேதி இந்­தி­யா­வின் புனே நக­ருக்கு சிங்­கப்­பூ­ரில் இருந்து விமா­னச் சேவை தொடங்­கி­யது.

ஐரோப்­பா­விற்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான விமா­னச் சேவை­க­ளின் எண்­ணிக்கை ஏறக்­கு­றைய கொவிட்-19க்கு முன்­பு இருந்த நிலையை எட்­டி­யி­ருப்­ப­தா­கக் குழு­மம் தெரி­வித்­தது.