சிங்கப்பூரின் பெருவிரைவு ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பு அனைத்துலகத் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதாக நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
லண்டன், பாரிஸ் போன்ற நகரங்களில் ரயில் நிலையங்களின் காற்று வெளிப்புறக் காற்றைவிட அதிகம் மாசடைந்து இருப்பது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. ரயில் சக்கரங்கள் தண்டவாளங்களில் உராய்வதாலும் வேகத் தடைக் கருவி, மின் தொடர்புக் கருவிஆகியவற்றின் இயக்கத்தாலும் காற்று இவ்வாறு மாசுபடுகிறது.
ஆனால் சிங்கப்பூர் ரயில் நிலையங்களில் ரயில் பாதைக்கும் தளமேடைக்கும் இடையில் முழு உயரக் கதவுகள் பொருத்தியிருப்பதால் மேம்பட்ட பாதுகாப்பு, எரிபொருள் சேமிப்பு, மாசடைந்த காற்று ரயில் பாதையில் இருந்து தளமேடைக்குப் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை சாத்தியமாகியிருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.

