மாதங்கி இளங்கோவன்
சிங்கப்பூரர்களிடையே குறிப்பாக சிங்கப்பூர் இந்தியர்களிடையே நலமிக்க வாழ்க்கைப் பாணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் நடந்தேறிய 'சுகாதார விழா 2022' நோய்களை முன்கூட்டியே எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தியது.
சுகாதாரப் பரிசோதனை செய்துகொள்ள மக்களிடையே நிலவும் தயக்கத்தைப் போக்கி உரிய காலத்தில் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள அந்த விழா ஊக்கமூட்டியது.
நாள்பட்ட நோய்களைத் திறம்பட சமாளிப்பது எப்படி என்பது பற்றியும் அந்த விழாவில் பலரும் பலவற்றையும் கற்றுக்கொண்டனர்.
இந்து அறக்கட்டளை வாரியம், மீடியாகார்ப் ஒலி 96.8 வானொலி இணைந்து அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தன.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), மக்கள் கழக நற்பணிப் பேரவை ஆகியவை துணை அமைப்புகளாக இருந்து உதவ, சுகாதார மேம்பாட்டு வாரியம், டான் டோக் செங் மருத்துவமனை, சாட்டா காம்ஹெல்த் ஆகியவற்றின் உதவியுடன் அந்த விழா இம்மாதம் 18ஆம் தேதி பிஜிபி மண்டபத்தில் நடந்தது.
விழாவின் சிறப்பு விருந்தினராக சுகாதார இரண்டாம் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டார்.
விழாவுக்கு வந்தவர்களில் பலருக்கும் வயதுக்கேற்ப இரத்த அழுத்தம், நீரிழிவு, கெட்ட கொழுப்பு போன்ற நோய்களைக் கண்டறிய பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் சுமார் 100 மருத்துவ தொண்டூழியர்கள் பல்வேறு நோய்கள் பற்றி மக்களுக்கு விளக்கினர்.
மார்பகப் புற்றுநோய் பரிசோதனையைச் சொந்தமாக செய்துகொள்வது எப்படி என்பதை அவர்கள் மாதர்களுக்குப் போதித்தனர்.
அதேபோல, செயற்கை சுவாச சிகிச்சை பற்றியும் மக்களுக்குக் கற்பிக்கப்பட்டது.
இந்தியரின் உடல்நல பழக்கவழக்கங்களை ஆராயத் தோதாக சுகாதார மேம்பாட்டு வாரியம், ஆய்வு பங்கேற்பாளர்களாகச் சிலரைச் சேர்த்துக்கொண்டது.
இந்த வாரியத்தின் இயக்குநர் திருவாட்டி வாசுகி, 42, நோய்கள் பற்றி இந்தியர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது முக்கிய நோக்கம் என்றார். இளையர்களை ஈர்க்க அதிக முயற்சிகள் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
உடல்நலனுக்கு முன்னதாகவே திட்டமிடும் ஏற்பாடு பற்றியும் முக்கிய மருத்துவ திட்டங்கள், மானியங்கள் பற்றியும் முதியோருக்கு விளக்கியதாக விழாவில் கலந்துகொண்ட மருத்துவ தொண்டூழியர் கவிதா முருகன், 45, தெரிவித்தார்.
சுகாதார விழாவிற்கு முதல்முறையாக வந்த ஜெய்பாலாஜி சப்னா, 39, அடுத்த விழாவில் மறதி நோயாளிகளுக்கு உதவுவது பற்றி தொண்டூழியர்கள் கற்றுக்கொடுத்தால் அது மேலும் உதவியாக இருக்கும் என்றார்.

