ஏமாற்றி பங்குகளை விற்ற நபருக்கு
19 மாதம் சிறை; $355,604 அபராதம்
சிங்கப்பூரர் ஒருவர் டெலிகிராம் உரையாடல் தளத்தில் இருந்தவர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி தம்மிடம் பங்குகள் இருக்கின்றன என்று பொய் சொல்லி மற்றவர்களையும் பங்குகள் வாங்க வைத்தார்.
அதன் தொடர்பில் 55 வயது கென்னத் கோ ஜியா போவுக்கு நேற்று 19 மாதங்கள் சிறைத் தண்டனையும் $355,604 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பங்குப்பத்திர, முன்பேர வணிகச் சட்டத்தின்கீழ் நான்கு குற்றச்சாட்டுகளில் கோ குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
325 முறை பல்வேறு பங்குகளில் போலியாக ஆர்வம் காட்டிய குற்றச்சாட்டும் அவற்றில் ஒன்றாகும்.
கடந்த 2016 ஜனவரி 6ஆம் தேதிக்கும் 2018 செப்டம்பர் 20ஆம் தேதிக்கும் இடையே, தமக்குச் சொந்தமில்லாத பங்கு வர்த்தகக் கணக்குகளைப் பயன்படுத்தி, பல்வேறு பங்குகளை வாங்குவதாகக் கூறி அந்த டெலிகிராம் தளத்தில் கோ குறுஞ்செய்திகள் அனுப்பினார்.
ஆனால் அந்தப் பங்குகளை வாங்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று கூறியது. மற்றவர்களை ஏமாற்றி தமக்குச் சாதகமான விலையில் பங்குகளை வாங்கி விற்பதற்கு அவர் அதன்வழி தூண்டினார். தமது சொந்த பங்கு வர்த்தகம் முடிந்த பிறகு, பங்கு வாங்குவதற்கான உத்தரவை அவர் ரத்து செய்தார்.
சிறுவர்களிடம் பாலியல் குற்றங்கள் புரிந்த பள்ளிப் பேருந்து ஓட்டுநர்
சிறப்புத் தேவைகள் உள்ள பிள்ளைகள் உட்பட பல சிறுவர் சிறுமியரிடம் பாலியல் குற்றங்கள் புரிந்ததன் தொடர்பில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஆறு குற்றச்சாட்டுகளை நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கேரி அலெக்சாண்டர் டான், 68, (படம்) சிறப்புத் தேவைகள் உள்ள சிறுவர்களைப் பள்ளிக்கும் வீட்டுக்கும் அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார். பள்ளியின் குத்தகை முடிந்ததும் பெற்றோருடன் தனிப்பட்ட உடன்பாடு செய்துகொண்டு பணியைத் தொடர்ந்தார்.
2014ல் சிறப்புத் தேவைகள் உள்ள சிறுவனுக்கும் 2017ல் வேறொரு சிறுமிக்கும் அவர் பாலியல் தொந்தரவு தந்தார்.
அத்துடன், டான் தமது நண்பரின் குழந்தைக்குப் பாலியல் தொந்தரவு தந்தார். அப்போது அக்குழந்தையின் தாயார் அருகில்தான் தூங்கிக் கொண்டிருந்தார்.
மேலும், அவர் பணிப்பெண்களிடம் நட்பாகப் பழகினார்.
அவர்களில் ஒருவரிடம் பேசி, முதலாளியின் சிறுவயது மகள், மகன் இருவரின் அந்தரங்கப் புகைப்படங்களை தமக்கு அனுப்பும்படி டான் கேட்டார்.
டானுக்குத் திருமணமாகி, பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டனர். டானுக்கு தண்டனை விதிக்கப்படும்போது மேலும் எட்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும்.
மாது விழுந்து மண்டை உடையச்
செய்தவருக்கு 5 நாள் தடுப்புக்காவல்
இளையர் ஒருவரின் தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒரு பாதசாரியை இடித்ததால் அவர் விழுந்து அவரது மண்டை உடைந்தது. சாதனத்தை ஓட்டிய 21 வயது ஓங் குவான் யுனுக்கு ஐந்து நாள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சில நாள் சிறைத் தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர்களின் பெயர் குற்றப் பதிவேட்டில் இருக்காது.
தனிநபர் நடமாட்டச் சாதனத்தை அலட்சியமாக ஓட்டி, அந்த 46 வயது மாதுக்கு கடும் காயம் உண்டாக்கியது உள்ளிட்ட குற்றங்களை ஓங் செப்டம்பரில் ஒப்புக்கொண்டார்.
சென்ற மார்ச் 23ஆம் தேதி பிற்பகல் ஒரு மணிக்கு பூன் லே அவென்யூ 3ல் சம்பவம் நடந்தது.
சட்டப்படி தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் எடை 20 கிலோகிராமைத் தாண்டக்கூடாது. ஆனால் ஓங் வைத்திருந்த சாதனம் கிட்டத்தட்ட 30 கிலோகிராம் எடை கொண்டிருந்தது.

