சாங்கி விமான நிலையத்திலிருந்து டாக்சி எடுக்கும்போது தற்போது செலுத்தும் $3 கூடுதல் கட்டணம் அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். அதேபோல செல்லும் தொலைவைக் கொண்டு கணக்கிடப்படும் எல்லா டாக்சி பயணங்களுக்குமான ஒரு காசு கட்டண அதிகரிப்பும் ஜூன் 30 வரை தொடரும்.
மேலும், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், ரிவர் வொண்டர்ஸ், இரவுநேர சஃபாரி ஆகிய சுற்றுலா தளங்களுக்கு மாலை 4 மணி முதல் இரவு 11.59 மணி வரை வசூலிக்கப்படும் இடத்துக்கான கூடுதல் $3 கட்டணமும் நீட்டிக்கப்படும்.
இங்குள்ள டாக்சி நிறுவனங்கள் அந்த கட்டண அதிகரிப்பை நேற்று அறிவித்தன. கம்ஃபர்ட் டெல்குரோ, எஸ்எம்ஆர்டிக்குச் சொந்தமான ஸ்ட்ரைட்ஸ் டாக்சி நிறுவனமும் தத்தம் ஃபேஸ்புக் பக்கங்களில் அதைத் தெரிவித்தன. பிரைம் டாக்சி அதன் இணையப்பக்கத்தில் அதைக் குறிப்பிட்டது.
டிரான்ஸ்கேப் நிறுவனமும் கூடுதல் கட்டணத்தைத் தொடரும் எண்ணம் உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நேற்று தெரிவித்தது.
எரிசக்தி, மின்சாரக் கட்டணங்களின் ஏற்றத்தைச் சமாளிக்க ஓட்டுநர்களுக்கு உதவுவது தனது நோக்கம் என்று ஸ்ட்ரைட்ஸ் கூறியது.
டாக்சி நிறுவனங்களின் நடவடிக்கையால் எல்லா நாளும் மாலை 5 மணி முதல் 11.59 மணி வரை, சாங்கி விமான நிலையம், சாங்கி, விமானச் சரக்கு நிலையம், விமான நிலையக் காவல் நிலையம், சிங்கப்பூர் விமான நிலைய தளவாடப் பூங்கா ஆகியவற்றிலிருந்து தொடங்கும் பயணங்களுக்கு, $8 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற எல்லா நேரங்களிலும் கூடுதல் கட்டணம் $6 ஆக இருக்கும்.
இங்குள்ள டாக்சி நிறுவனங்கள் கட்டணங்களை மாற்ற திட்டமிட்டால், முன்கூட்டியே பொதுப் போக்குவரத்து மன்றத்திடமும் ஏழு நாள்களுக்கு முன் பொதுமக்களிடமும் தெரிவிக்க வேண்டும்.

