கோஜெக் நிறுவனம், அதன் வாடகைக் கார் ஓட்டுநர்களிடம் பெறும் இடைத்தரகுத் தொகையை 10 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக உயர்த்தவுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி அது நடப்புக்கு வரும்.
சிங்கப்பூர் கொவிட்-19 கிருமிப் பரவலில் இருந்து வலுவாக மீட்சி அடைந்திருப்பதையும் தனியார் வாடகைக் காரை கூடுதலானோர் பயன்படுத்துவதையும் கோஜெக் நேற்று சுட்டியது.
அதன்வழி, கோஜெக் தளத்தைப் பயன்படுத்தி பெறும் ஒவ்வொரு பயணக் கட்டணத்திலிருந்தும் 85 விழுக்காட்டுத் தொகை ஓட்டுநர்களுக்குக் கிடைக்கும். தற்போது அவர்களுக்கு பயணக் கட்டணத்திலிருந்து 90 விழுக்காடு கிடைக்கிறது.
கோஜெக்கின் போட்டி நிறுவனமான கிராப், அதன் ஓட்டுநர்களிடமிருந்து 20 விழுக்காட்டு சேவைத் தொகையை வசூலிக்கிறது.
மேலும் ஓட்டுநர்களுக்கான தற்காலிகக் கட்டணம் வரும் 2023 ஜூன் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும். அதிகச் செலவுகளைச் சமாளிக்க அக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிகள் செலுத்தும் அத்தொகைக்கு நிறுவனம் இடைத்தரகை வசூலிப்பதில்லை.
மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட அத்தொகையை இந்த ஆண்டு இறுதிவரை மட்டும் வசூலிப்பதாக இருந்தது.
கிருமிப் பரவலுக்கு முன்னர் கோஜெக் 20 விழுக்காட்டு சேவைத் தொகையை ஓட்டுநர்களிடமிருந்து வசூலித்தது. ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்கப்பட்டதால் சேவைக் கட்டணத்தை அது கடந்த ஆண்டு ஜூனில் பாதியாகக் குறைத்தது.

