செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5f32da07-3159-463c-8bd1-efee7266cedd
-

சிடிசி பற்றுச்சீட்டுகள் தானம்

சிங்கப்பூர் குடும்பங்கள் 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான சிடிசி பற்றுச்சீட்டுகளை இனி தங்களுக்கு விருப்பமான அறநிறுவனத்துக்கு நன்கொடையாக வழங்கலாம். டிசம்பர் 31ஆம் தேதியுடன் காலாவதியாகக்கூடிய சிடிசி பற்றுச்சீட்டு களை சிடிசி பற்றுச்சீட்டுத் திட்ட இணையத்தளம் மூலமாக 2023 ஜனவரி 31 வரை ரொக்கத்தைப்போல கொடையாக வழங்கலாம். கடந்த ஆண்டு 1.2 மில்லியன் குடும்பங்களும் இவ்வாண்டு 1.16 மில்லியன் குடும்பங்களும் சிடிசி பற்றுச் சீட்டுகளைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்-மலேசிய எல்லையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்

ஆண்டிறுதி விடுமுறைக் காலத்தில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் காரணமாக உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூரின் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்த இரு சோதனைச் சாவடிகளின் வழியாகவும் கடந்த வெள்ளிக்கிழமைக்கும் ஞாயிற்றுக் கிழமைக்கும் இடைப்பட்ட நாள்களில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 359,000 பேர் எல்லை கடந்ததாகவும் அது குறிப்பிட்டது. இந்த எண்ணிக்கை கொவிட்-19 கொள்ளை நோய்க்கு முந்திய நிலவரத்தைக் கிட்டத்தட்ட எட்டிவிட்டது. அப்போது தினமும் 415,000 பேர் எல்லைகடந்த பயணம் மேற்கொண்டனர். எல்லை கடந்து செல்லும், வரும் பயணி கள் போக்குவரத்து நிலவரத்தை ஆணையத்தின் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களிலும் 'ஒன் மோட்டோரிங்' இணையத்தளத்திலும் கண்காணிக்கலாம். வரிசைகளில் முந்திச் செல்வதை வாகனமோட்டிகள் தவிர்க்க வேண்டும் என்று ஆணையம் நினைவூட்டி உள்ளது. அவ்வாறு செய்வது நெரிசலைக் கடுமையாக்குவதோடு பாதுகாப்புக்கும் இடையூறு விளைவிக்கும் என்றது அது.

'பொன்மனமிருந்தால் புவி வசமாகும்' நூல் வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் 'பொன்மனமிருந்தால் புவி வச மாகும்' என்ற நூலின் 2ஆம் பாகம் டிசம்பர் 31 மாலை

6 மணியளவில் ஸ்ரீ நாராயண மிஷன் முதல்தளத்தில் வெளி யீடு காணவிருக்கிறது. ஏற்பாடுகளை சிங்கப்பூர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் செய்கிறது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் பேராசிரியர் டாக்டர் ஃபைசல் இப்ராஹிம் பங்கேற்க உள்ளார். இந்த நூலின் முதல் பாகம் ஏற்கெனவே ஸ்ரீ நாராயண மிஷனில் வெளியிடப்பட்டு, அந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதி நன்கொடையாக வழங்கப்பட்டது. அந்த முதல் பாகமும் திருத்தி வடிவமைக்கப்பட்டு இரண்டாம் பாகத்துடன் வெளியீடு காண்கிறது. 2023ஆம் ஆண்டு தனது 75ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவிருக்கும் ஸ்ரீ நாரா யண மிஷனின் 75 ஆண்டு கால சமூக சேவையைப் போற்றும் வகையில் திரட்டப்படும் நிதி அனைத்தும் அதற்கு நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.