பைகள் சிலவற்றில் பொருள்களைச் சரியாக அடுக்கி வைக்கவில்லை என்பதற்காகத் தன்னைத்தானே அறைந்துகொள்ளும்படி இல்லப் பணிப்பெண்ணைத் துன்புறுத்தினார் 63 வயது ஆங் போ கியோக்.
சம்பவம் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி நடந்தது. முதலாளியின் மிரட்டலுக்கு பயந்த பணிப்பெண் ஸின் இ ஃபியூ மூன்று முறை அதற்கு அடிபணிந்தார்.
முன்னதாக, தனக்கு திருப்தி அளிக்கும் வகையில் பைகளை அடுக்கவில்லை என்று திருவாட்டி ஆங் குறைகூறியதையடுத்து பணிப்பெண் அமைதியாக மீண்டும் அந்த வேலையைச் செய்யத் தொடங்கினார். ஆனாலும் சமாதானம் அடையாத திருவாட்டி ஆங் தன்னைத்தானே அறைந்துகொள்ளும்படி பணிப்பெண்ணைக் கட்டாயப்படுத்தினார். வலுவாக அறைந்துகொள்ளும்படி மூன்று முறை வலியுறுத்தியதுடன் தனக்கு அறிவில்லை எனும் பொருள்படும்படியான வாசகங்களைச் சொல்லும்படி கூறினார்.
தனது வீட்டில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அறிந்திருந்தும் திருவாட்டி ஆங் இவ்வாறு நடந்துகொண்டதை அரசாங்க வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.
வலித்தபோதும் பணிப்பெண் சிகிச்சை ஏதும் எடுத்துக்கொள்ளவில்லை. அன்றாடம் பணிப்பெண்ணைத் திருவாட்டி ஆங் திட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் அண்டைவீட்டார் காவல்துறையிடம் புகாரளித்தனர்.
அச்சத்துடன் இருந்த பணிப்பெண்ணை அதிகாரிகள் மீட்டு வேறு இடத்துக்கு அனுப்பினர்.
வேண்டுமென்றே பணிப்பெண்ணுக்குக் காயம் ஏற்படக் காரணமாயிருந்ததைத் திருவாட்டி ஆங் ஒப்புக்கொண்டார். அவரது தாயார் 2019ல் உயிரிழந்த பிறகு துக்கத்தில் இருந்த திருவாட்டி ஆங்கிற்கு பிறரை அனுசரித்துப்போகும் மனநிலை இல்லை என்று கூறப்பட்டது.