'என்டியுசி ஃபேர்பிரைஸ்' சலுகை விலையில் முட்டை விற்பனை
அதிகரிக்கும் பணவீக்க நெருக்கடியால் முட்டை விலை உயர்ந்துவரும் வேளையில், 'என்டியுசி ஃபேர்பிரைஸ்' நிறுவனம் 'பசார் ஃபிரெஷ்' முட்டைகள் தொடர்பில் விலைச் சலுகையை அறிவித்துள்ளது.
ஒரே ரசீதில் குறைந்தபட்சமாக $25 செலுத்தும் வாடிக்கையாளர் 30 முட்டைகள் அடங்கிய பொட்டலத்தை $6.85க்கு வாங்கிக்கொள்ளலாம்.
நேற்று முதல் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை இது நடப்பில் இருக்கும். அனைத்து ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளிலும் இணையத்திலும் இவ்வாறு வாங்க இயலும்.
கிருமிப் பரவல், உக்ரேனியப் போர் போன்றவை முன்னெப்போதும் இல்லாத அளவில் பொருளியலில் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதால் வாழ்க்கைச் செலவுகளின் உயர்வைத் தணிக்கும் முயற்சிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருவதை நிறுவனம் சுட்டியது.
இவ்வாண்டு ஏப்ரலில் உள்ளூர்ப் பண்ணைகளில் நியூகாசல் நோய்த்தொற்று பரவியதால் முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த நிலையிலும் முட்டைக்கு விலைக்கழிவு வழங்கப்பட்டதை நிறுவனம் எடுத்துரைத்தது.
கட்டுப்படியான விலையில் முட்டைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் ஃபேர்பிரைஸ் நிறுவனம் உள்ளூர்ப் பண்ணைகளிடம் மட்டுமன்றி எட்டு வெளிநாடுகளில் இருந்து முட்டைகளைத் தருவிக்கிறது.
ஹோட்டல் அறை முன்பதிவு தொடர்பில் $20,000 மோசடி
ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா, மரினா பே சேண்ட்ஸ், செந்தோசா ஆகியவற்றில் உள்ள ஹோட்டல் அறைகளுக்கு இணையத்தில் முன்பதிவு செய்வதாக ஏறக்குறைய 20 பேரை ஏமாற்றிய ஆடவருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆடவர் மொத்தம் $23,010 தொகையை ஏமாற்றியதாகக் கூறப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளை 28 வயதாகும் சியாவ் ரென் வெய் ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கும்போது இத்தகைய மேலும் 17 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
கெரோசல் இணையத்தளத்தின் வாயிலாக இவர் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

