சளி, காய்ச்சல், இருமல் ஆகியவற்றுக்கான மருந்துகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் விநியோகம் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகிறது.
நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் இதன் தொடர்பில் சில்லறை விற்பனையாளர்கள், மருந்துக் கடைகள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அமைச்சு கூறியது.
இந்த உடல்நலச் சிக்கல்களைப் போக்குவதற்குப் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ள மருந்துகளை சில்லறை விற்பனையாளர்கள் விற்பதாக அது குறிப்பிட்டது.
அதிகரிக்கும் தேவையைச் சமாளிக்க சில்லறை விற்பனையாளர்களும் மருந்துக் கடைகளும் கூடுதலாகக் கொள்முதல் செய்யும் முயற்சிகளை மேற்கொள்வதாகக் கூறிய அமைச்சு சில நிறுவனங்களின் மருந்துகளைப் பெறுவதற்குக் கூடுதல் காலம் பிடிக்கக்கூடும் என்று சொன்னது.
பொதுமக்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத் தயாரிப்பைப் பெற விரும்பி அது கையிருப்பில் இல்லை எனும் சூழல் ஏற்பட்டால், வேறொரு நிறுவனம் தயாரித்த அதேவகை மருந்தை வாங்கிப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மருந்துகளை, குறிப்பாக சிறார்களுக்கான மருந்துகளை, தேவையான அளவிற்கு மட்டும் வாங்கும்படியும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. மருந்துகள் வீணாவதைத் தவிர்க்க இது உதவும் என்பதைச் சுகாதார அமைச்சு சுட்டியது.
சீனக் குடிமக்கள் சிலர் இங்கிருந்து மருந்துகளை வாங்கித் தாயகத்திற்கு அனுப்புவதைக் காணமுடிவதாக சென்ற வெள்ளிக்கிழமை சீன மொழி நாளேடான சாவ்பாவ் தகவல் வெளியிட்டிருந்தது. சீனாவில் கொவிட்-19 நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலையில் அங்குள்ள மருந்துக் கடைகளில் இப்போது மருந்துகள் கையிருப்பு இல்லையெனத் தெரிகிறது.

