ஒலிம்பிக் காற்பந்தாட்டக்காரர் 'டிவிங்கிள் டோஸ்' காலமானார்
'டிவிங்கிள் டோஸ்' எனச் செல்லமாக அழைக்கப்பட்ட முதுபெரும் காற்பந்து விளையாட்டாளர் சியா பூன் லியோங் (படம்) நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 97.
ஒலிம்பிக் காற்பந்துப் போட்டியில் பங்கெடுத்த ஒரே சிங்கப்பூரர் எனும் பெருமை அவரைச் சாரும். இந்த வட்டாரத்தின் மிகத் திறமையான விளையாட்டாளர் எனப் பெயர்பெற்ற அவர், 1948ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் காற்பந்தாட்டப் போட்டியில் சீனாவைப் பிரதிநிதித்தார். துருக்கி அணியிடம் 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் சீன அணி அப்போது தோல்வியுற்றது. அதே போட்டியில் கோல் காப்பாளராக சு சீ செங்கும் பெர்லினில் 1936ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தற்காப்பு விளையாட்டாளராக சுவா பூன் லேயும் சீன ஒலிம்பிக் அணியில் நியமிக்கப்பட்டிருந்தாலும் சிங்கப்பூரர்களான அவ்விருவரும் போட்டியில் விளையாடவில்லை.
திரு சியாவிற்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் சாங்கி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்ததாக அவரது மகன் டோனி தெரிவித்தார். 1951ல் சிங்கப்பூருடன் நட்புமுறை ஆட்டங்களில் விளையாடிய சுவீடன் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜான் மஹோன், சியாவின் கால் திறத்தைக் கண்டு வியந்து அவருக்கு 'டிவிங்கிள் டோஸ்' இருப்பதாகப் பாராட்டினார்.
குடியிருப்பு வட்டார வணிகர்கள் மின்னிலக்கமயமாதலுக்கு ஆதரவு
குடியிருப்பு வட்டார வணிகர்களில் கூடுதலானோர் மின்கட்டண முறை, மின்வர்த்தகம் ஆகியவற்றுக்கு மாறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 கிருமிப் பரவலின்போது மின்னிலக்கமயமாதலுக்கு அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு அளிக்கப்பட்டதும் இதற்குக் காரணம்.
சென்ற மாத நிலவரப்படி அவர்களில் 93 விழுக்காட்டினர் மின்கட்டண முறையைக் கொண்டுள்ளதாகவும் 66 விழுக்காட்டினர் தங்கள் வர்த்தகம் குறித்த தகவல்களை இணையத்தில் பதிவிடுவதாகவும் கூறப்பட்டது. ஒப்புநோக்க, 2020ல் இந்த விகிதம் ஆறு விழுக்காடாக இருந்தது.
வர்த்தக, தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் 'சிங்கப்பூர் ஹார்ட்லேண்ட் ஸ்டார்' விருதுகளை வழங்கிப் பேசும்போது இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

