தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக மளிகைப் பொருள் விநியோகச் சேவையில் ஈடுபட்டுள்ள 'ரெட்மார்ட்' நிறுவனத்திற்கு $72,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம் தன்வசம் உள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களை உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் பாதுகாக்கத் தவறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக சிங்கப்பூரின் 'பிடிபிசி' எனப்படும் தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.
2020 அக்டோபர் மாதம் 898,791 'ரெட்மார்ட்' பயனாளர் கணக்குகளில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் விற்பனைக்கு விடப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த விவரங்கள் வாடிக்கையாளர் தரவுத்தளத்திலிருந்து திருடப்பட்டு இருந்தன.
வாடிக்கையாளர்களின் பெயர், மறைச்சொற்கள், தொலைபேசி எண்கள், கடன்பற்று அட்டைகளின் ஒருசில எண்கள் போன்றவை அந்த தனிப்பட்ட விவரங்கள்.
'ரெட்மார்ட்' நிறுவனத்தை நடத்தும் லஸாடா இணைய வர்த்தகத் தளத்தில் இருந்து அந்த மாதம் கசிந்தது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும் ரெட்மார்ட் வாடிக்கையாளர் விவரங்கள் அடங்கிய தரவுதளம் லஸாடா தரவுதளத்துடன் இணைக்கப்படவில்லை.
மேலும், ரெட்மார்ட் தரவுத்தளம் 2019ஆம் ஆண்டிலிருந்து புதுப்பிக்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது.
தனிநபர் தகவல்கள் கசிந்தது பற்றி 2020 அக்டோபர் 29ஆம் தேதி தனது கவனத்துக்கு வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து புலன் விசாரணை தொடங்கப்பட்டதாகவும் பிடிபிசி கூறியது.
ரெட்மார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் இணையத்தளமும் கைபேசிச் செயலியும் லஸாடா தளத்துடன் இணைக்கும் நோக்கில் 2019ஆம் ஆண்டில் முடக்கப்பட்டன.
இருப்பினும், ரெட்மார்ட் தரவுத் தளத்தின் பின்புல அமைப்பிற்கான ஒருங்கிணைப்பு நிறைவேற்றப்படாமல் அது மெய்நிகர் சேமிப்பகத்தில் தொடர்ந்து இருந்து வந்ததாக வும் அந்த சேமிப்பகத்தை 'அமேஸான் வெட் சர்வீசஸ்' இணைய நிறுவனம் வழங்கியதாகவும் பிடிபிசி கூறியது.

