இந்தோனீசியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான டெல்காம், எரிசக்தி நிறுவனமான மெட்கோ பவர் ஆகியவற்றுடன் இணைந்து இந்தோனீசியாவில் அதன் முதல் தரவு நிலையத்தை சிங்டெல் அமைக்கிறது.
இது சிங்டெலின் வட்டாரத் தரவு நிலைய உத்தியின் ஒரு பகுதியாக எழுப்பப்படும் மூன்றாவது நிலையமாகும். ஆசியானின் வளர்ச்சிக்கு ஏற்ப அதற்குத் தேவையான மின்னிலக்க உள்கட்டமைப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய சிங்டெல் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
புதிய மெட்லோ பவர் தரவு நிலையத்தின் பெரும்பாலான பங்குகள் இந்தோனீசியாவின் டெல்காம் நிறுவனத்துக்குச் சொந்தமாகும். எஞ்சிய பங்குகள் மெட்கோ பவர், சிங்டெல் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.
தரவு நிலையங்கள் அமைப்பது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் டெல்காம் நிறுவனத்துடன் சிங்டெல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
புதிய தரவு நிலையம் பாத்தாம் தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள கபில் தொழில்துறை வட்டாரத்தில் எழுப்பப்படுகிறது.
இந்நிலையம் மூன்று கட்டங்களாகக் அமைக்கப்படும். கட்டுமான நிறைவடைந்ததும் 51 மெகாவாட்ஸ் வழங்கக்கூடிய ஆற்றலை அது கொண்டிருக்கும். முதல் கட்டமாக அது 20 மெகாவாட்ஸை வழங்கும்.
நம்பகத்தன்மை, பாதுகாப்பு, நீடித்த நிலைத்தன்மை ஆகியவை தொடர்பான ஆக அண்மைய தரநிலைக்கு உட்பட்டு பாத்தாமில் அமைக்கப்படும் இந்தப் புதிய தரவு நிலையம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.