2023லும் சிங்கப்பூர் நாணயம் செயல்திறனுடன் திகழும்

2023லும் சிங்கப்பூர் நாணயம் செயல்திறனுடன் திகழும்

3 mins read
ec4ef0fb-5896-4f4b-bb97-c91e6b3f6330
-

அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு வெகு­வா­கக் கூடி வரு­கிறது. அதற்கு எதி­ராக மதிப்பு குறை­யா­மல் மிக அதிக மீள்­தி­ற­னு­டன் திக­ழும் ஆசி­யா­வின் நாண­ய­மாக சிங்­கப்­பூர் வெள்ளி இருக்­கிறது.

இருந்­தா­லும்­கூட உல­க­ளா­விய அள­வில் பொரு­ளி­யல் சூழ்­நிலை அடுத்த ஆண்­டில் மாறும் நிலை­யில், வளர்ச்சி கணி­ச­மான அள­வுக்கு மெது­வ­டை­யும். பண­வீக்­கம் உச்­சத்­துக்­குச் சென்று பின்­னர் குறை­யத் தொடங்­கும்.

இந்த நிலை­யில், வட்­டார நாடு­களின் நாண­யங்­கள் சிங்­கப்­பூர் நாண­யத்தை விஞ்சி செய­லாற்­றும் வாய்ப்பு உள்­ள­தாக நம்­பப்­ப­டு­கிறது.

அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான சிங்­கப்­பூர் வெள்­ளி­யின் மதிப்பு இந்த ஆண்­டில், இது­வரை நேற்று பிற்­ப­கல் 1 மணி நில­வ­ரப்­படி 0.3% மதிப்பு ஏறி இருந்­தது.

நேற்று ஒரு டால­ருக்கு 1.3481 வெள்­ளி­யாக சிங்­கப்­பூர் நாண­யத்­தின் மதிப்பு இருந்­தது. இது புதன்­கி­ழமை நில­விய சிங்­கப்­பூர் வெள்­ளி­யின் மதிப்­பை­விட 0.24% அதி­கம்.

அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு உல­கம் முழு­வ­துமே எல்லா நாண­யங்­க­ளை­யும் விட அதி­க­மா­கக் கூடி இருக்­கிறது.

அமெ­ரிக்­கா­வின் மத்­திய வங்கி பல ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு வட்டி விகி­தத்தை ஏற்­றி­விட்­டது. இத­னால் அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு மிகவும் உயர்ந்து இருக்­கிறது.

அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு கூடி­யி­ருப்­ப­தன் விளை­வாக ஐரோப்­பிய யூரோ, பிரிட்­ட­னின் பவுண்ட் உள்­ளிட்ட முக்­கி­ய­மான நாடு­க­ளின் நாணய மதிப்­பு­கள் வீழ்ச்சி கண்டு இருக்­கின்­றன.

ஜப்­பா­னின் யென் நாணய மதிப்பு இந்த ஆண்­டில் இது­வரை 17.4% குறைந்து இருக்­கிறது. சீன நாண­யம், தென் கொரியா, தைவான் நாண­யங்­க­ளின் மதிப்பு 7% முதல் 12% வரை இறங்கி இருக்­கின்­றன. மலே­சிய ரிங்­கிட் 6.2% வீழ்ச்சி கண்­டுள்­ளது.

இருந்­தா­லும் சிங்­கப்­பூர் நாண­யம் வலு­வான மீள்­தி­ற­னு­டன் திகழ்­கிறது.

ஆசிய நாடு­களில் பெரும்­பாலான நாடு­கள் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை அகற்றத் தொடங்­கி­ய­தற்கு முன்­பா­கவே சிங்­கப்­பூர் அந்­தக் கட்­டுப்­பா­டு­களை அகற்ற முடிவு செய்­தது.

இத­னால் சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் வலு­வாக மீட்­சி­ய­டைந்­து­வி­டும் என்ற நம்­பிக்கை உறு­தி­யா­னது. இது ஒரு­பு­றம் இருக்க, சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் எடுத்த கொள்கை முடி­வு­களும் சிங்­கப்­பூர் வெள்­ளி­யின் செயல்­தி­ற­னுக்கு உறு­து­ணை­யா­கத் திகழ்ந்­தன.

வர்த்­தக அடிப்­ப­டை­யில் பார்க்­கை­யில், சிங்­கப்­பூர் நாண­யத்­தின் மதிப்பு 2021 அக்­டோ­ப­ரில் இருந்து சுமார் 7% உயர்ந்து இருப்­ப­தாக பகுப்­பாய்­வா­ளர்­கள் மதிப்­பி­டு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூ­ரின் வர்த்­தகப் பங்­காளி­க­ளாக உள்ள நாடு­க­ளின் நாண­யங்­க­ளுக்கு எதி­ராக அதி­வே­க­மாக வலு கூடி­யுள்ள நாண­ய­மாக சிங்­கப்­பூர் வெள்ளி திகழ்­கிறது.

இந்­நி­லை­யில், பண­வீக்­கம் இன்­னும் கொஞ்ச காலம் நீடிக்­கும் என்­றா­லும் அது கூடிய விரை­வில் உச்­சத்­தைத் தொட்டு பின் இறங்க தொடங்­கி­வி­டும் என்று கணிக்­கப்­படு­கிறது. இத்­த­கைய நிலை­யில், நாண­யக் கொள்­கை­கள் மேலும் இறுக்­கம் அடை­யாது என்று நம்­பப்­ப­டு­கிறது.

மத்­திய வங்­கி­கள் வட்­டி­வி­கித உயர்வை நிறுத்­தி­வி­டக்கூடும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவற்­றின் விளை­வாக அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான வட்­டார நாண­யங்­களின் மதிப்பு உய­ரத் தொடங்கி இருக்­கிறது.

தென் கொரி­யா­வின் வோன் நாண­யம் அக்­டோ­பர் 1 முதல் டால­ருக்கு எதி­ராக சுமார் 8% மதிப்பு கூடி இருக்­கிறது. சிங்­கப்­பூர் வெள்­ளி­யும் ஜப்­பா­னிய யென்­னும் இரண்­டா­வது நிலை­யில் இருக்­கின்­றன. இவை இரண்­டும் சுமார் 5.2% மதிப்பு கூடி இருக்­கின்­றன.

மலே­சிய ரிங்­கிட், தைவான் டாலர், சீனா­வின் சீன நாண­யம் ஆகி­யவை அடுத்­த­டுத்த நிலை­களில் உள்­ளன.

வளர்ச்சி மெது­வ­டை­கிறது. பண­வீக்­கம் உச்­சத்­தைத் தொட்டு பின்­னர் இறங்­கி­வி­டும் என்­ப­தற்­கான அறி­கு­றி­கள் தெரி­ய­வ­ரு­கின்­றன. இந்­தச் சூழ்­நி­லை­யில், சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கொள்­கை­களை மேலும் இறுக்­காது என்றே பகுப்­பாய்­வா­ளர்­கள் நம்­பு­கி­றார்­கள்.

இருந்தாலும்கூட ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் நாணய ஆணையம் அடுத்த கூட்டத்தை நடத்தும்போது கொள்கைகள் மேலும் இறுக்கமடை யும் என்பதற்கான வாய்ப்புகளை அறவே மறுத்துவிட இயலாது என்றும் நம்பப்படுகிறது.