காவல்துறை அதிகாரிகள் மீது மதுபானம் ஊற்றிய மாது கைது
செந்தோசாவில் இம்மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற 'ஸூக்அவுட்' வெளிப்புற நிகழ்ச்சியில் உள்ள மேடை சரிந்து விழுந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அங்கு இருந்தவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மாது ஒருவர் மதுபானம் என நம்பப்படும் திரவத்தை அந்த அதிகாரிகள் மீது ஊற்றினார். காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமையை ஆற்றுவதற்கு இடையூறாக முரட்டுத்தனமாக நடந்துகொண்டார் என்று
32 வயதான அந்த மாது கைது செய்யப்பட்டார் என்று காவல்துறை நேற்று தெரிவித்தது.
செந்தோசா சிலோசோ கடற்கரையில் டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2.20 மணிக்கு அங்குள்ள மேடை சரிந்தது. கிளமெண்டி காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர புலனாய்வுக்குப் பிறகு அந்த மாதின் அடையாளத்தை உறுதிப்படுத்தினர். அவர் இம்மாதம் 7ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
புதிய குற்றங்களுக்காக தொடர் குற்றவாளி ஜஸ்விந்தர் சிங்குக்கு ஏழு மாதச் சிறை
தொடர் குற்றவாளியான 54 வயது ஜஸ்விந்தர் சிங், 2014ல் பலமுறை சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். 2020 மார்ச் மாதத்தில் கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் கிரவுன் பிளாசா சாங்கி விமான நிலைய ஹோட்டலில் தரையில் எச்சில் உமிழ்ந்து 'கொரோனா, கொரோனா' என கத்திய சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதற்காக அவர் 2020 ஏப்ரலில் இரண்டு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாண்டு ஆகஸ்ட்டில் சாங்கி பொது மருத்துவமனையில் தனது சிகிச்சைக்கு சென்ற அவர், அங்கு பணியில் இருந்த துணைக் காவல்துறை அதிகாரியின் கழுத்தில் இருந்த அடையாளப் பட்டையைப் பிடித்து இழுத்ததுடன் மேலும் சில முரட்டுத்தனமான செயல்களைப் புரிந்தார். அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவர் மது அருந்தியிருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்தக் குற்றங்களுக்காக திரு சிங்குக்கு நேற்று முன்தினம் ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
'ஓ' நிலை தேர்வு மோசடி: குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் தப்பியோட்டம்
'ஓ' நிலை தேர்வு மோசடிக்காக நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட துணைப் பாட வகுப்பு நிலைய முன்னாள் முதல்வரான 56 வயது போ யுவான் நீ, நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாக நம்பப்படுகிறது. அவரைத் தேடிக் கண்டுபிடிக்க 'இண்டர்போல்' எனும் அனைத்துலக காவல் துறையின் உதவியை நாடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நவம்பர் 23ஆம் தேதி தனது தண்டனையைத் தொடங்க அவர் நீதிமன்றத்தில் முன்னிலை யாகவில்லை என்பதால் அவருக்கு எதிராக கைதாணை பிறக்கப்பிக்கப்பட்டது.

