மூலாதார பயனீட்டாளர் விலைக் குறியீடு நவம்பரில் முந்தைய மாதத்தைப்போலவே ஏற்றம் கண்டது.
அதாவது, பணவீக்கத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. இது, பணவீக்கம் மட்டுப்படுவதற்கான அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தனியார் போக்குவரத்து, தங்கு மிடங்கள் தவிர மூலாதார பணவீக்கம், சிங்கப்பூரின் செலவினங்களைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.
ஆண்டுக்கு ஆண்டு எனும் அடிப்படையில் இது, 5.1 விழுக்காடாக இருந்தது. அதே சமயத்தில் புளும்பெர்க் கருத்துக் கணிப்பின் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பான 5 விழுக்காட்டுடன் இது ஒத்துப்போகிறது.
2022 பிப்ரவரியில் முதல் முறையாக குறையத் தொடங்கிய பணவீக்கம், அக்டோபரிலிருந்து மாறாமல் இருந்து வருகிறது. செப் டம்பரில் அந்த விகிதம் 5.3%
உணவுக்கான செலவு, சில்லறை மற்றும் இதர பொருள்களின் தேவை அதிகரித்ததால் சேவைக்கான செலவு, மின்சாரம், எரிவாயு போன்ற செலவுகள் சற்று அதிகரித்ததாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் வெளியிட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தது.
முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பரில் பயனீட்டாளர் விலைக் குறியீடு அல்லது ஒட்டுமொத்த பணவீக்கம் நிலையாக 6.7 விழுக்காட்டில் இருந்தது. ஆனால் நிபுணர்கள் கணித்த 6.5 விழுக்காட்டைவிட இது சற்றுக் கூடுதலானது.
ஓசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணரான செலனா லிங், இவ்வாண்டின் 3வது காலாண்டில் உச்சத்தைத் தொட்ட பிறகு பணவீக்கம் மெதுவடைவதை அறிகுறிகள் தெளிவாகக் காட்டுவதாகக் கூறினார்.
சிங்கப்பூரின் மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையம், 2021 அக்டோபரிலிருந்து ஐந்து முறை நாணயக் கொள்கையை கடுமையாக்கியது.
இதனால் சிங்கப்பூர் நாணயம் வலுவடைந்து பணவீக்கம் குறைய உதவியது.
இந்த நிலையில் பொருள் முதல் சேவை வரையிலான சிங்கப்பூருக்கான இறக்குமதி பணவீக்கம் இன்னும் சிறிது காலத்திற்கு நிலையாக இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக, தொழில் அமைச்சும் கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
ஒட்டுமொத்த பணவீக்கம் முழு ஆண்டுக்கும் சராசரியாக 6 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பிரதான பணவீக்கம் ஆணையத்தின் அக்டோபர் கணிப்புகளி லிருந்து மாறாமல் 4 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

