சிங்கப்பூர்-ஜப்பான் இணக்கம்

சிங்கப்பூர்-ஜப்பான் இணக்கம்

2 mins read
10e6d94a-beb7-4e54-ad24-6eacd9247619
-

விமான பயணத் தொடர்புகள் கூடும்; அறவே கரிமம் இல்லா இலக்கை எட்ட உதவும்

சிங்கப்பூரும் ஜப்பானும் நேற்று ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டன. அதனையடுத்து இரு நாடுகளும் விமானப் போக்குவரத்து தொடர்புகளை அதிகரிக்கும்.

பயணிகளுக்கு அதிக விமான வசதிகள், சேவைகள் கிடைக்கும். விமானப் போக்குவரத்துத் துறை யைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக ஆக்குவது, அதன் பாதுகாப்பை மேம்படுத்துவது, போக்குவரத்து நிர்வாகம், விமான நிலைய புத்தாக்கம், தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கி பரந்த அளவிலான ஓர் ஏற்பாட்டை அமல்படுத்த இரு நாடுகளும் உறுதி தெரிவித்து இருக்கின்றன.

ஜப்பானிய தரப்புடன் உடன்பாடு கையெழுத்தானது பற்றி சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது.

ஜப்பானுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றுக்கும் இடையில் இத்தகைய உடன்பாடு முதன்முதலாக இப்போதுதான் கையெழுத்திடப்பட்டு இருக்கிறது என்று ஆணையமும் ஜப்பானிய குடிமைப் போக்குவரத்து இலாகாவும் கூறின.

பல்வேறு துறைகளில் சேர்ந்து செயல்பட்டு ஆற்றலை இரு தரப்புகளும் பகிர்ந்துகொள்ளும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறைந்த விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய வேலைகளை உருவாக்க தேவைப்படும் தேர்ச்சிகள் தொடர்பான தகவல்களையும் அவை பகிர்ந்துகொள்ளும்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத எரிபொருள்களைக் கொண்டு செயல்படும் விமானங்களுக்குப் படிப்படியாக மாறிக்கொள்வதற்கு உடன்பாடு ஊக்கமூட்டும்.

"சிங்கப்பூர்-ஜப்பான் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளியல் உறவு வலுவாக இருக்கின்றன. இருநாட்டு மக்களுக்கும் இடையில் அருமையான உறவு இருக்கிறது.

"இரு தரப்புகளுக்கும் இடை யிலும் அதற்கு அப்பாலும் விமானத் தொடர்புகளை விரிவுபடுத்த இரு நாடுகளும் விரும்புகின்றன. இதற்கு புதிய உடன்பாடு வழி வகுக்கும்," என சிங்கப்பூர் ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கோக் ஜுவான் கூறினார்.

புதிய உடன்பாடு பற்றி கருத்து கூறிய ஜப்பானின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுலாத் துறை அமைச்சின் அனைத்துலக விமானப் போக்குவரத்து பிரிவுக்கான உதவி துணை அமைச்சர் டோஷியுகி ஒனுமா, அனைத்துலக விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் இலக்கைச் சுட்டினார்.

அந்த நிறுவனம், விமானப் போக்குவரத்துத் துறையில் 2050வது ஆண்டுவாக்கில் அறவே கரிமக்கழிவு இல்லாத நிலையைச் சாதிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

இந்த இலக்கை நிறைவேற்ற இந்த உடன்பாடு உதவும் என்று ஜப்பானிய உதவி துணை அமைச்சர் கூறினார்.