பாசிர் ரிஸ் எம்ஆர்டி ரயில் நிலைய பயணிகள் காத்திருக்கும் நேரம் 2024ல் மிகவும் குறையும்

பாசிர் ரிஸ் எம்ஆர்டி ரயில் நிலைய பயணிகள் காத்திருக்கும் நேரம் 2024ல் மிகவும் குறையும்

2 mins read
208725f8-4e8c-463a-b9ed-51e227d6a83b
-

பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையத்தில் ரயில் திரும்புவதற்கான ரயில் தண்டவாளப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமானப் பணி 2024ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முடிவடையும்.

அப்போது பாசிர் ரிஸ் நிலையத்தில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பயணிகள், ரயிலுக்காக காத்திருக்கும் நேரம் மிகவும் குறையும்.

வேகமாகவே ரயில்கள் திரும்பிவிடும் என்பதால் உச்ச நேரங்களில் 20 விழுக்காட்டு அளவுக்கு அதிகமாக ரயில்கள் இயங்க முடியும் என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் ஃபேஸ்புக் பக்கத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இப்போது உச்ச நேரத்தில் ஒரு மணிக்கு 30 ரயில்கள் சேவை வழங்குகின்றன. பாசிர் ரிஸ் ரயில் நிலைய ரயில் பாதை கட்டுமானப் பணிகள் முடிவடையும்போது ஒரு மணிக்கு 36 ரயில்கள் சேவை வழங்க முடியும்.

அந்த ரயில்களில் கூடுதலாக 9,000 பயணிகள் ஏறிச் செல்லலாம். பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையத்தில் ரயில்கள் விரைவாகத் திரும்புவதற்கான தண்டவாளப் பாதையை அமைப்பதற்கான திட்டம் பற்றி 2018ல் அறிவிக்கப்பட்டது. பணிகள் 2019ல் தொடங்கின. 2023ல் வேலைகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொவிட்-19 காரணமாக கட்டுமான வேலைகள் தாமதம் அடைந்து ஓராண்டு கழித்து 2024ல்தான் நிறைவடைகின்றன.

பாசிர் ரிஸ் நிலையம் கிழக்கு-மேற்கு வழித்தடத்திற்கான முனையமாகத் திகழ்கிறது. இரண்டு திசைகளிலும் மாறி மாறி ரயில்கள் செல்வதற்கு இப்போது இருக்கும் வசதியைவிட 2024ல் சிறந்த வசதி கிடைக்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் 2018ல் கூறியது.

அதாவது, ரயில் வண்டிகள் எதிரெதிர் திசைகளில் வேகமாக மாறிச் செல்ல முடியும். இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பயணிகள் அதிகரிப்பை ஈடுசெய்யலாம்.