முரசொலி
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தூங்கும் நிலைக்குப் போய்விட்ட சுற்றுலாத் துறை மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அந்தத் துறையில் பரபரப்பு கிளம்பி இருக்கிறது.
கொவிட்-19க்கு முந்திய நிலையை இன்னமும் எட்டவில்லை என்றாலும் வேகமாக பழைய நிலை திரும்புகிறது. சிங்கப்பூருக்குச் சுற்றுப் பயணிகள், வர்த்தக பயணிகள் அதிகமாக வரத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 57,000 பயணிகள் இங்கு வந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த நவம்பரில் 816,000 பேராக அதிகரித்துள்ளது. சிங்கப்பூருக்கு நவம்பர் மாத முடிவுவரை இந்த ஆண்டு வருகை தந்துள்ள மொத்த பயணிகளின் எண்ணிக்கை 5.37 மில்லியனாக இருக்கிறது என்று சிங்கப்பூர் பயணத்துறை கழகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு முடிவில் நான்கு மில்லியன் முதல் ஆறு மில்லியன் வரை சுற்றுப்பயணிகளை சிங்கப்பூருக்கு வரும்படி கவர்ந்து ஈர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ள கழகம், அந்த இலக்கை வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிவிட்ட ஒரு கட்டத்தை எட்டி இருக்கிறது.
இருந்தாலும்கூட இந்த அளவு, கொவிட்-19 தலை எடுத்ததற்கு முன் அதாவது, 2019ல் இங்கு வந்த மொத்த பயணிகளின் எணணிக்கையான 19.1 மில்லியனுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் குறைவுதான். இதற்குக் கொரோனா மட்டுமே காரணமாகத் தெரியவில்லை.
உக்ரேனில் தொடரும் போர், விமான நிறுவனங்களின் விமானக் கொள்ளளவு ஆற்றல், ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் குறுந்தொலைவுப் பயணங்களை மேற்கொள்ள பயணிகளிடம் காணப்படும் நாட்டம் உள்ளிட்ட பல அம்சங்களும் இதர காரணங்களாகத் தெரிகின்றன.
இவை ஒருபுறம் இருக்க, பயணத் துறை சூடுபிடிப்பதற்கு ஏற்ப ஹோட்டல் தொழில்துறையினர் ஆயத்தமாகி வருகிறார்கள். தேவையைப் புரிந்துகொண்டு அதைச் செம்மையாகக் பயன்படுத்திக் கொள்ள இந்தத் துறையினர் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
சிங்கப்பூரில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் ஒன்பது ஹோட்டல்கள் திறக்கப்பட இருக்கின்றன. இந்த நிலவரம், சிங்கப்பூர் வரும்படி உலகப் பயணிகளிடம் விருப்பத்தைத் தூண்டிவிடும் அம்சமாக இருக்கும் என்பது திண்ணம். உலகின் இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் ஹோட்டல்கள் குறைவாகத்தான் உள்ளன.
கொரோனா காரணமாக முடங்கிக் கிடந்த பயணத்துறை மறுபடியும் சூடுபிடிக்கும் நிலையில், சுற்றுப் பயணிகளின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் மாறி இருக்கும் என்று எதிர்பார்க்க இடம் உள்ளது. வருங்கால பயணிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்கும் வசதிகளை நாடுவார்கள். தேவை அதிகரிக்கும்போது முன்பதிவுகள் கூடும்.
இதைச் சமாளிக்க ஏதுவாக சிங்கப்பூரில் ஹோட்டல் துறை நன்கு மேம்படும் என்று நம்பலாம்.
இப்போதைய சூழ்நிலைகளைப் பார்க்கையில், பயணத்துறை தொடர்ந்து நடைமுறை சவால்களை எதிர்நோக்கியே ஆக வேண்டும் போல் தெரிகிறது. குறிப்பாக எண்ணெய் விலை, உணவு விலை உயர்வு காரணமாக செலவு அதிகரித்துள்ளது.
தொழிலாளர் சந்தை தொடர்ந்து இறுக்கமாகவே இருந்து வருகிறது. இவற்றை எல்லாம் சந்தித்து வெற்றிகரமான முறையில் மீண்டு வரவேண்டும்.
சிங்கப்பூரை பொறுத்தவரை அது ஓர் அனுகூலத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தொற்று தலைதூக்கி இருந்த காலகட்டத்தில் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட சிங்கப்பூர், குறிப்பாக எந்த வகை பயணிகளை சிங்கப்பூருக்கு கவர்ந்து ஈர்க்க வேண்டும், அதிகம் செலவிட தயாராக இருக்கும் அத்தகைய பயணிகளுக்குத் தோதாக என்னென்ன இடம்பெற்று இருக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்தது.
அதாவது, சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை முந்திய அளவு களை விஞ்சிவிட வேண்டும் என்பதில் மட்டும் ஒருமித்த கவனத்தைச் செலுத்தாமல், இங்கு வந்து இங்கு பலவற்றையும் அனுபவிக்கும் பயணிகளிடம், சிங்கப்பூரில் தாங்கள் செலவிடும் தொகை தகும் என்ற மனநிறைவை ஏற்படுத்த வேண்டும் என்பதில் முழுக் கவனத்தையும் செலுத்துவதே இலக்காக உள்ளது.
சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 20 மில்லியனாக இருக்க வேண்டும், அந்த அளவுக்கு ஆண்டுதோறும் அனைத்துலக பயணிகளைக் கவர வேண்டும் என்பது இலக்கு. இந்த இலக்கு நிறைவேற வில்லை என்றாலும்கூட பயணிகள் இங்கு செலவிடும் தொகை, அதிகமாகவே இருக்கும் என்பதை இந்த அணுகுமுறை உறுதிப்படுத்தும்.
பொதுவாக ஹோட்டல் அறை வாடகை என்பது தேவையைப் பொறுத்தே இருக்கும். சீனா தன் கதவுகளை மறுபடியும் அகலத் திறந்துவிடும்போது இங்கு பயணிகளின் எண்ணிக்கை பெருகும்.
ஹோட்டல் துறையைப் பார்க்கையில், அந்தத் துறையும் தொற்று காலத்தைப் பயனுள்ள வழிகளில் பயன்படுத்திக்கொண்டதாகவே தெரிகிறது.
அது வசதிகளை மேம்படுத்தியது. புதிய புதிய பயண அனுபவங்களைப் புத்தாக்க வழிகளில் அறிமுகப்படுத்தியது. தன் ஊழியர்களின் தேர்ச்சிகளை மேம்படுத்தியது. ஹோட்டல் துறைக்கு அனுகூலமாக பலவும் இடம்பெறுகின்றன. பல்வேறு தொழில் துறை, உல்லாச பொழுதுபோக்குத்துறை நிகழ்ச்சிகளை சிங்கப்பூரில் நடத்த திட்டங்கள் உள்ளன.
அண்மையில் கடந்த அக்டோபரில் நடந்த கிராண்ட் பிரீக்ஸ் ஃபார்முலா1 கார் பந்தயம் போன்ற அத்தகைய நிகழ்ச்சிகள் அதிகமாக செலவிடும் பயணிகளையும் கவரும்.
எல்லா நிலவரங்களையும் ஆராய்ந்து பார்க்கும் போது பயணத்துறை நீண்ட காலப்போக்கில் வளர்ச்சி அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், ஹோட்டல்களை நடத்துவோர் தங்கள் சேவையையும் வசதிகளையும் விருந்தினர் களின் விருப்பங்களை நிறைவேற்றும் அளவுக்கு மேம்படுத்தும்பட்சத்தில், அதற்கு உரிய அதிக கட்டணத்தை அவர்கள் நிர்ணயிக்கலாம். அதிகம் செலவிடும் பயணிகளை அதிக எண்ணிக்கையில் அவர்கள் தாராளமாக எதிர்பார்க்கலாம்.
மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு ஏற்ப மாறிக்கொண்டால், மீள்திறனுடன் திகழ்ந்தால், எதிர்காலத்திற்குத் தோதாக ஆயத்தமாக இருந்தால் பயணத்துறை சூடுபிடிக்கும் சூழலில், ஹோட்டல் துறையும் செழித்தோங்கும் என்பது உறுதி.

