கொவிட்-19 தொற்றுப் பரவல் தணிந்து, அதிகமான ஊழியர்கள் பணியிடங்களுக்கு மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளதால் மத்திய வர்த்தக வட்டாரத்தில் அலுவலக வாடகைச் சந்தை சூடுபிடித்துள்ளது. அடுத்த ஆண்டிலும் அவ்வட்டாரத்தில் அலுவலக வாடகை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் என்பது சொத்துச் சந்தைப் பகுப்பாய்வாளர்களின் எதிர்பார்ப்பு.
இவ்வாண்டின் கடைசிக் காலாண்டில் மத்திய வர்த்தக வட்டாரத்தில் 'ஏ' தரநிலையிலான அலுவலகத்திற்கான மாத வாடகை சதுர அடிக்கு 11.70 வெள்ளியாக உயர்வு கண்டது.
தொடர்ந்து ஏழாவது காலாண்டாக இந்த உயர்வு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தத்தில், இது 8.3% உயர்வு. முந்திய ஆண்டைக்காட்டிலும் இது 3.8% அதிகம்.
தேவை அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் அலுவலகங்களுக்கான காலி இடங்களின் அளவும் குறைந்து வருகிறது. 2021ஆம் ஆண்டு இறுதியில் 6.3 விழுக்காடாக இருந்த காலியிட விகிதம், இப்போது 5 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று 'சிபிஆர்இ' சொத்து ஆலோசனை நிறுவனம் தெரிவிக்கிறது.
சந்தையில் தேவை அதிகமாக இருப்பதால், குத்தகைப் புதுப்பிப்பின்போது வாடகையும் உயர்த்தப்படுகிறது. இதனால், கட்டட உரிமையாளர்களும் பயனடைகின்றனர்.
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் காலாவதியான குத்தகை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டபோது, வாடகை சராசரியாக 7.9% உயர்த்தப்பட்டது என்று 'கேப்பிட்டாலேண்ட் இன்டகிரேட்டட் கமர்ஷியல் டிரஸ்ட் (சிஐசிடி)' தெரிவித்தது.
அதேவேளையில், 2021 செப்டம்பர் 30ஆம் தேதி 91.7 விழுக்காடாக இருந்த வாடகையிருப்பு விகிதம், இவ்வாண்டின் அதே நாளில் 96 விழுக்காடாகக் கூடியது.
'சிஐசிடி'க்கு உரிமையான கட்டடங்களில் அலுவலக வாடகை சதுர அடிக்கு $10.52 என்ற நிலையை எட்டியுள்ளது. 2021ல் இது சதுர அடிக்கு $10.07ஆக இருந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டைக்காட்டிலும், இவ்வாண்டில் புதிய குத்தகைகளுக்கான வாடகை விகிதம் 2% முதல் 12% வரை கூடி உள்ளது என்று சிட்டி டெவலப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தொழில்நுட்பத் துறையில் அதிகமான ஆட்குறைப்பு, ஆட்சேர்ப்பு நிறுத்த நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் அலுவலக வாடகைச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று சிபிஆர்இ நிறுவனத்தின் தென்கிழக்காசிய ஆய்வுப் பிரிவுத் தலைவர் டிரிசியா சோங் கூறினார். கடந்த ஈராண்டுகளில் ஒட்டுமொத்த வாடகைச் சந்தையில் அத்துறையின் பங்கு 40 முதல் 50 விழுக்காடாக இருந்தது என்று அவர் சொன்னார்.
அதேபோல, காலியிட விகிதமும் அதிகமாகலாம் என்றும் சிபிஆர்இ குறிப்பிட்டது.